மைசூரில் கும்பமுனி





பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை சேர்ந்தது. என்னோடு பசியைப் பகிர்ந்து கொள்வதற்கு ராகவன் சில மாதங்கள் தங்கி இருந்தான்.

அவனும் சென்ற பிறகு பசியின் சுயராஜ்யம்தான், ஒன்றும் பிரச்சினையில்லை. சில்க் இன்ஸ்டிடூடில் சம்பளமில்லாத கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை. கூடிய சீக்கிரத்தில் அதே வேலையை ஐயாயிரம் சம்பளத்துக்கு தருவதாக உறுதி சொன்னார்கள்.  ஜூனில் தீசிஸ் சமிட், வைவா எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்குப் போய் நான்கே நாட்கள். எங்கிருந்தோ அம்மா அறுநூறு ருபாய் பணம் புரட்டி கொடுத்தார்கள். இப்போது ஆகஸ்ட் இறுதி,  சாப்பாட்டிலிருந்து சப்பாத்திக்கு இறங்கி, ராகி களி உருண்டையும் கீரை சாம்பாரும் என்றானது இரண்டு மாதம் வரை நீடித்தது. பொருளாதாரம் அதற்கும் இடம் கொடுக்காததால் மாற்று வழி கண்டுபிக்க வேண்டியதாயிற்று. வழியும் இருந்தது.

ஸ்ரிராம்புரா சில்க் இன்ஸ்டிடுட் ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி குதித்தால் குடகு ரோட்டில் இருநூறடி தூரத்தில் மங்களூர் பேக்கரி. ஒரு பெரிய பாக்கெட் பிரெட்டும் கால் லிட்டர் தயிரும் பதினைந்து ரூபாய். இரண்டு நாட்களுக்கான உணவு அதுதான். வாரச்செலவு நாப்பத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை பேக்கரி திறப்பதில்லை என்பதால் மனம் பசியை நினைவுகூர்வதில்லை. சில வாரங்களில் இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள்கூட வருவதுண்டு. சும்மா சொல்லக்கூடாது ஃப்ளுரைடு தண்ணீர்தான் ஆனாலும் அற்புதமான சுவை.
எந்த சூழ்நிலையிலும் செலவு செய்துவிடக் கூடாது என்று பாஸ்போர்ட் வாங்குவதற்காக தபால் ஆபீசில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயோடு திருச்சிக்கு சென்ற கனவுப்பயணம் .அடுத்தது. திருச்சி மரக்கடையில் போய் இறங்கும்போதே மணி காலை ஒன்பதரையைத்  தாண்டி இருந்தது. சாலையின் எதிர்புறத்தில்தான் பாஸ்போர்ட் ஆபீஸ். கையில் ஃபயிலோடும் இன் பண்ணிய சட்டையோடும் என்னப் பார்த்த ஒரு நீல கட்டம்போட்ட லுங்கி கட்டிய நடு வயதுக்காரர் கேட்டார்.

“என்ன தம்பீ பாஸ்போர்ட் அப்ளிகேசனா?”

“ஆமாண்ணே”  நான்.

“ஆபீஸ் பத்து மணிக்கிதான் தெறக்கும். எல்லா டாகுமெண்டும் இருக்கா?”
“இருக்குண்ணே”.

“மூணு ஐடி ப்ரூப் ரெண்டு செட்டு அட்டெஸ்ட்டு காப்பியும் வேணுமே” எனக்கு குப்பென்று வேர்த்தது. கையில் காசும் இல்லாத வேலையும் இல்லாத ஒரு ஜனநாயக இந்தியாவின் குடிமகன் மூன்று ஐடி ப்ரூஃப்களுக்கு எங்கே போவான்? எனக்கு வேர்க்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவர்  போலச் சொன்னார்.

“கவலைப்படாதே தம்பீ! இங்கதான் நம்ம வக்கீல் ஒருத்தர் இருக்கார். டாகுமெண்ட் ஒன்னு கம்மியா இருந்தாலும் பிரச்சினையில்லை, அவரே சப்போர்டிங் டாகுமெண்ட் ரெடிபண்ணி, பேப்பர்லாம் சரிபார்த்து அட்டேஸ்டேசன் போட்டு குடுத்திடுவார்” என்றார்.

எனக்கு நம்பிக்கையில்லை. உள்ளே எதுவுமே சொல்லாமல் வாங்கிக் கொள்வார்கள் என்று அவர் சொன்னதை கேட்டதும் இந்தியக்  குடியரசின் உள்குத்து நிர்வாகங்களை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.  ஆனால் அவர் அடுத்த பாணத்தையும் தயாராக வைத்திருந்தார்.

“அம்பது ரூபாதான் தம்பி பீசு”.

சுதந்திரத்தை அனுபவிக்கும் சுயநல தலைமுறையின் சொட்டு ரத்தமாவது எனக்குள்ளும் இருக்குமல்லவா? சரி போய்த்தான் பார்போமே. இன்னொரு ஐடியோடு வருவது இன்றைக்கு சாத்தியமில்லை. ஐம்பது ருபாய் தானே.

சேர்ந்தார்போல் இருக்கும் இரண்டு மூன்று மரக்கடைகளுக்கு பின்புறத்தில் ஒரு நுண்சந்து, இருப்பதே தெரியவில்லை. நடை வண்டிகள் நான்கைந்து தரையில் சக்கரம் ஊன்றியபடியும் தலைகுப்புற கவிழ்த்தும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. கிழக்கிலிருந்து நுழைந்தால் வலதுபக்கம் மூன்றாவது கடை. பச்சைநிற நைலான் பேப்பர் விரித்த இரும்பு மேசைக்கு பின்னால் வெள்ளை சட்டைபோட்ட கருப்பான ஆள். உடம்பு தடிமன் இல்லாவிட்டாலும் தொப்பை இருந்தது. நான்கைந்து மர ஸ்டூல்கள், எல்லாம் நிரம்பி இருந்தன. சனிமூலையில் ஒரு வெள்ளை மானிட்டர் கொண்ட கம்ப்யூட்டர். உடம்பின் எல்லா பக்கங்களிலும் ஊக்கு சொருகி சேலைகட்டிய இளம்பெண் ஒருத்தி மூங்கில் பிளாச்சு மாதிரி தட்டையான உடம்போடு உட்கார்ந்து அவசரமாக எதையோ ‘தட் தட்’ என்று டைப் அடித்துக்கொண்டிருந்தாள்.

நீலகட்டம் லுங்கி வணக்கம் வைத்ததிலேயே தெரிந்தது வெள்ளை சட்டைதான் வக்கீல் என்று. இல்லையென்றாலும் கண்டுபிடிப்பதொன்றும் அத்தனை கடினமாயிருந்திருக்காது.

“டாகுமென்ட்ஸ் குடுங்க” என்ற வெள்ளை சட்டை அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை. நீல லுங்கி எப்போது போனார் என்றே தெரியவில்லை. மளமளவென்று வேலை மும்முரமாக நடந்தேறியது.

கிரீன் டிம்மி தாளில் ஒரு பக்கத்திற்கு பத்திர எழுத்தில் எதையோ எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட்டார்.  இரண்டுபக்க பிரிண்ட் அவுட் பேப்பரை கொண்டுவந்து நீட்டினாள் அந்த கம்பியூட்டர் ஒல்லிப்பெண். எனக்காகத்தான் இவ்வளவு நேரமாக டைப் அடித்துக்கொண்டிருந்தாளா? நான் வந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காதே. ரெடிமேட் டாகுமென்ட் தானே பெயரை மட்டும் மாற்ற எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது. எல்லாம் முடிந்து பின் பன்னி கொடுத்தாள். ஐம்பது ரூபாயை நீட்டினேன்.

“இன்னும் இருநூறு ரூபாய் குடுங்க” என்றாள்.

“அம்பது ரூபா தானே பீஸ்னு சொன்னாங்க? ”  கோபம் கண்களை மறைத்தது எனக்கு. யார் கேட்டது இந்த சேவையை?

“அவர் பீஸ் அம்பதுதான் சார், கிரீன் டிம்மி, ஸ்டாம்ப், டைப்பிங் சார்ஜ் எல்லாம் இருக்குல்ல?” என்றாள். முறைத்தபடியே நின்றிருந்தேன்.

“அவர்கிட்ட பேசிக்கிங்க சார்” என்று சொல்லிவிட்டு பணத்தை டேபிளில் வைத்துவிட்டு மறுபடியும் அவள் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏம்ப்பா காலையிலேயே பிரச்சினை பண்ற?” வெள்ளை சட்டை.

“வேலை முடிஞ்சா பத்தாதா தம்பி? ரொம்ப கணக்கு பாக்குற” எனக்கு பின்னால் ஒரு சிவப்பு ஜரிகை கரை வெள்ளை வேட்டி.

சிலீரென்று கூசியது உடல். கொள்ளையடிப்பது நீங்கள் குற்ற உணர்ச்சி எனக்கு. பேசிப் பயனில்லை. பணத்தை வைத்து விட்டு வெளியே வந்து எதிர்புறம் இருந்த பாஸ்போர்ட் ஆபீஸ் வளாகதிற்குள் நுழைந்தேன். யாருமே இல்லை   வெறிச்சோடிக்  கிடந்தது.

“இப்போ ஆபீஸ் இங்கே இல்லை தம்பி உறையூருக்கு மாத்திட்டாங்க”  என்றபடி ஒரு ஆட்டோகாரர் நின்றிருந்தார்.

இதை இவ்வளவு நேரமா யாருமே சொல்லலையே. உறையூர் பாஸ்போர்ட் ஆபீஸ் வந்து சேர்ந்தபோது மணி பத்தேகால் ஆகிவிட்டிருந்தது.  அந்த வக்கீல் சர்டிபிகேட்டுக்கு எந்த பொருளும் இல்லை.

எண்ணூறு ரூபாய்தான் மிச்சமிருந்தது, இதைக்கொண்டு மீண்டும் அப்ளிகேசன் போடுவது இப்போதைக்கு சாத்தியமல்ல. சத்திரம் போய் பஸ் பிடித்தால் எப்படியும் மூன்று மணிக்குள் வீட்டிற்கு போய்விடலாம். மனம் ஏனோ சம்மதிக்கவில்லை. அம்மா மறுபடியும் யாரிடமாவது கடன் வாங்குவார்கள். திரும்பி மைசூர் போய்ச்சேரவே எப்படியும் இருநூறு காலியாகிவிடும். கொஞ்சநாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்தான். சாப்பிட்டு பழகிவிட்டால் பிறகு பிரட்டுக்கு திரும்புவது எப்படி? யோசனையிலேயே நடந்ததில் தில்லைநகர் வந்துவிட்டது. தில்லைநகர் என்றதும்  மக்கள் மன்றம் ஞாபகம் வந்தது. புத்தகக் கண்காட்சி இருக்குமே என்று ஒரு சபலம். ஒவ்வொருமுறை அங்கே போகும்போதும் வேடிக்கை பார்ப்பதற்கான பொருளாதாரம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

முப்பதடி நடந்ததும் மஞ்சள் போர்டுகள் கண்ணில் பட்டன. புத்தகக் கண்காட்சிதான். பொருளியல் கணக்குகள் எல்லாம் மூளையில் இருந்து ஒரு புகைமூட்டம் போல கலைந்துவிட்டது. எந்த யோசனையும் இல்லை. ஆடிப் பஞ்சத்து நாய் அடுக்களையில் நுழைந்தமாதிரி பட்டென்று பாய்ந்து விட்டேன். ‘இந்தியா காந்திக்குப் பிறகு’ இரண்டு பாகங்கள், ஒரு ஜே கிருஷ்ணமூர்த்தி. எத்தனையோ புத்தகக் கண்காட்சிகளில் எடுத்து எடுத்து தடவி புரட்டிப் பார்த்து வைத்துவிட்டுப்போன நாஞ்சில்நாடன் கதைகள் தன்னிச்சையாக ஏறி அமர்ந்திருந்தது கைகளில். இருளடைந்த கண்களோடு புத்தக அடுக்கை நெஞ்சில் தாங்கியபடி நான் நடந்துவந்த காட்சி எத்தனை பரிதாபகரமாக இருந்திருக்க வேண்டும் என்பது, அந்தக் கடையின் விற்பனையாளர் என்னைப் பார்த்த பார்வை நினைவுக்கு வரும்போதெல்லாம் தோன்றுகிறது. வெளியே வந்ததும் எதிரிலேயே புரோட்டாக்கடை. இனி எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் பரவாயில்லையென்று புகுந்துவிட்டேன்.

*****

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டும் வரையிலும் பதைபதைப்பாகவே இருந்தது, திருச்சிவரை வந்துவிட்டு வீட்டிற்கு போகவில்லையே என்று.  பஸ்ஸில் வரும்போதே புத்தகத்தை புரட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் பஸ் பயணத்தில் படிப்பதில்லை என்பதால் எடுத்து எடுத்து பார்த்தபடியே இருந்தேன். பயணக்களைப்பு, தூக்கம் எனக்கு முன்னாலேயே அறைக்கு வந்து காத்திருந்திருந்தது. எங்கிருந்தோ விழுவதுபோல கனவு, திடுக்கிட்டு எழுகையில் நன்றாக விடிந்துவிட்டது. ஏழு மணி இருக்கும். இன்ஸ்டிடூட் வாசலிலேயே இருக்கும் கண்ணன் நாயர் கடையில் மூன்று சப்பாத்திகள் ஒரு சாயா. ஆபீஸ்க்கு போனால் பார்வை எதிலுமே ஒட்டவில்லை. வெளியே லேசாக மழை தூற ஆரம்பித்தது. நாஞ்சில்நாட்டு சாரல் மனதில் வட்டமடித்துக்கொண்டே இருந்தது. நேற்று பெய்த மழையில் ட்ரான்ஸ்பார்மர் புகைந்து கரண்ட் கட். கம்ப்யூட்டர் இயங்க வழியில்லை. கிளம்பி வந்துவிட்டேன். படுக்கை மேலேயே இருந்தது நாஞ்சில்நாடன் கதைகள்.

அவரைப் பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருந்தாலும், அவர் எழுத்து இது வரையிலும் ஒரு தூரத்து கனவு மட்டுமே. முசிறி நூலகத்தில் ஏதோ பருவ இதழில் ஒரு கதை படித்ததாய் ஞாபகம், எதுவும் உறுதியாய் நினைவில்லை. புத்தகத்தைத் திறந்தேன் ‘விரதம்’ முதல் கதை. சிரித்துக்கொண்டேன். கிளம்பும்போது ஆபீசில் யாரோ கேட்டார்கள்,

“என்ன ஸ்பெசல் ஃபூட் இன்னைக்கு?”

“நத்திங் ஸ்பெசல்”. எதுவுமே இல்லாததன் சிறப்பை எப்படித்தான்  சொல்வது? சில வைராக்கியங்களையும் எச்சமும் படிக்கையில் சிரித்துக்கொண்டேதான் இருந்தேன்.  ஆனால் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது. ‘உப்பு’ கதைக்குள் வருவதற்குள்ளாகவே நாஞ்சில் மொழி இயல்பாக கரைந்துவிட்டது எனக்குள். பழையாற்றங்கரையிலிருந்து பொன்னாற்றங்கரைக்கு அரூபமாக எழும் ஒரு வரப்பில் தெற்கு நோக்கித் தனியே நடக்கிறேன். எங்கோ நீர் சுருண்டு விழும் ஓசை கேட்கிறது. ஜன்னலுக்கு வெளியே கவனிப்பாரின்றி பெய்யும் மழையிலிருந்து எழுந்துவந்து அறையை நிறைக்கிறது சொக்கன் கொறிக்கும் வருகடலையின் வாசனை.

மைசூருக்குத் திரும்பி வந்து ஒருவாரம் வரை கையில் பணம் தாக்குபிடித்தது. பிரட்டும் தயிரும் இப்போது சிரமமாயிருக்கவில்லை. முகம் சுளிக்காமல் பசியைப் பகிர்ந்துகொள்ள புத்தகங்களை விடவும் வேறு துணை அமையாது. பசியின் கொடுக்குகள் பக்கங்கள் தோறும் வந்து கொட்டியபடியே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் புறக்கணிப்பு, உணவைத் தொடர்ந்தபடியே இருக்கும் அவமானங்கள்.  நாஞ்சிலார் உணவையோ பந்தியையோ பற்றி விவரிக்க ஆரம்பித்தாலே மனம் கிடந்து துடிக்கிறது, என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு. பசியை பகிர்ந்து தருவதில் அப்படி என்னதான் ஆனந்தமோ இவருக்கு என்று சமயத்தில் கோபமாகக்கூட வரும்.

“அவசரகால நிவாரணமாக செப்பனிடப்பட வேண்டிய ஒட்டிய வயிறுகள்” என்கிறார் ‘இருள்கள் நிழல்களல்ல’ கதையில். பண்டாரத்தோடு நானும் பந்தியையே வெறித்தபடிதான் உட்கார்ந்திருந்தேன். பிசைந்து கொடுக்கும் பிண்டம் கூட வந்து சேரவில்லை எனக்கு. படிக்கும்தோறும் பசியும் துக்கமும்  ஏறியபடியே இருக்கிறது, ஆனாலும் நிறுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு இரண்டேனும். கன்னடமும் தெரியாது வெளியில் எங்கே போவதென்ற இலக்கும் தோன்றவில்லை. இன்றைக்கு நாளைக்கென வேலை உறுதியாவதும் இழுத்தபடியே இருக்கிறது. இந்த வாரம் விடுமுறையும் காரணமாக சேர்ந்து ஞாயிறு வியாழன் அன்றே தொடங்கிவிட்டது. தொடர்ந்து ஐந்தாவது ஞாயிறு இன்று.

நூற்றைம்பது ஏக்கர் அளவுக்கு பெரிய எஸ்டேட் கேம்பஸ்தான். ஆனாலும் பட்டுப்பூச்சிக்கு உணவாகப் போடும் மல்பரி தவிர வேறு எதுவும் இல்லை.  சில இடங்களில் இருந்த கொய்யா சப்போட்டா மரங்களிலும் பிஞ்சும் இல்லாமல் பழமும்  இல்லாமல் நடு காய்கள். கடிக்கவும் முடியவில்லை ஒரே துவர்ப்பு. முதிர்ந்த மல்பரி மரங்களில் கருஞ்சிவப்பு நிறத்தில் சடை சடையாய் பழங்கள். இதை சாப்பிடலாமா என்று யோசனை, நிச்சயம் விஷமாக இருக்காது. ஒரு நம்பிக்கையில் பறித்து சப்பி இழுத்தேன். புளிப்பும் இனிப்பும் கலந்த ருசி, மயிர் கூசியது. நாஞ்சில்நாடன் கதைகளை மட்டும் இன்றைக்கு படிக்கச்கூடாது என்று உறுதியாக இருந்தேன். எச்சில் விழுங்கும்போது தொண்டையில் ஒரே வலி. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சும்மா இருக்க முடியவில்லை. விலாவில் சுண்டி இழுப்பது போன்ற வலி பசியின் சத்தம் வெளியே கேட்டது. கல்பெஞ்சில் பக்கத்திலிருந்த புத்தகம் காற்றில் படபடத்தது. கும்பமுனி சிரிப்பது போல இருந்தது. நான் இடலாக்குடி ராசாவும் இல்லை எனக்காக கண்ணீர் வடிக்கிற சித்தியும் யாரும் இங்கில்லை என்று சீறினேன். முகம் வாடிப்போயிற்று அவருக்கு.

“சரி பாட்டா, கோச்சுக்காத” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை பிரித்தேன். மனம் ஆயிரம் வழிகளில் உணவுக்கான திட்டங்களில் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. அரைமயக்கத்திலும் இரவு நெடுநேரம் தூக்கத்துகாக போராடிகொண்டிருந்தேன். சட்டென்று சாமுண்டீஸ்வரி கோயில் ஞாபகம் வந்தது. மைசூருக்கு வந்த புதிதில் அங்கே போயிருந்தபோது அன்னதான மண்டபம்  பார்த்திருக்கிறேன். உடம்பில் ஒரு புது பலம் வந்தது வயிறு நிறைந்தது போன்ற உணர்வு.

காலை ஏழுமணிக்கெல்லாம் குளித்து கிளம்பியாயிற்று. சாமுண்டீஸ்வரி கோயில் இருக்கும் சாமுண்டிமலை மைசூருக்கு வெளியே கிழக்கில், நான் இருக்கும் ஸ்ரிராம்புரா புறநகர் மேற்கு. எப்படியும் பத்துபன்னிரண்டு கிலோமீட்டர்கள் இருக்கும். ட்ராவல் பேக்கை கொட்டி உலுக்கியதில் தேறியது மூன்றுரூபாய் சில்லறை மட்டுமே. இரண்டு பஸ் ஏறவேண்டும் எப்படியும் பதினாறுரூபாய் தேவை. தோராயமாக கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மைசூரில் எங்கிருந்து பார்த்தாலும் மலை தெரியும், வழிதவறிட வாய்ப்பில்லை. நடக்க முடியாமல் கால்கள் பின்ன ஆரம்பித்தது, வழியெங்கும் கடைகளில் வாழைத்தார்கள் தொங்கின. மூன்று ரூபாய்க்கு கிடைக்குமா என்பதுதான் சந்தேகமாக இருந்தது. காசு போதவில்லை என்று அதிகம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற தயக்கம். தொடர்ந்து அவமானத்திற்கான அத்தனை வாக்கியங்களையும் மனம் நாஞ்சில் கதைகளில் இருந்து அசைபோட்டு, இது நடக்குமோ அது நடக்குமோ என்று எல்லா திசைகளும் பார்த்தப்படியே இருந்தது. மனமெங்கும் ஒருவித குறுகுறுப்பும் குற்ற உணர்ச்சியும் இருந்துக்கொண்டே இருந்ததால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

படியேறும் வழியில் நந்திப்பாறையில் கரும்புசாறு விற்றுக்கொண்டிருந்தார்கள். ‘விடுவிடு’வென நிற்காமல் படிகளில் தாவிக்கொண்டிருந்தேன். மலை உச்சிக்குப் போய் சேர்கையில் பத்துமணி இருக்கும். சுமாரான கூட்டம். அன்னதான மண்டபத்தை கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. ஆனாலும் அன்னதானம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.  தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நான்கைந்து சன்யாசிகள் மண்டப வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. ஓரளவுக்கு நிம்மதி. ஒருவேளை அது அவர்கள் வாடிக்கையாக தங்கும்  இடமோ என்று மீண்டும் ஒரு சந்தேகம். மண்டபத்தூணில் சிவப்பு எழுத்துக்களில் அறிவிப்பு, தினமும் பன்னிரண்டு மணிக்கு அன்னதானம் என்று. சமையல் வாசனையும் காற்றில் வந்தது. நிம்மதி. சன்யாசிகளும் மற்றவரும் உட்கார்ந்திருப்பதில் ஒரு வரிசை இருப்பதை தாமதமாகத்தான் கவனித்தேன். அதற்குள் ஒரு முப்பதுபேர் பேர் எனக்குமுன் வரிசையில் கூடிவிட்டார்கள்.

பன்னிரண்டுமணிக்கு மண்டப வாசல் திறக்கும்போது இருநூறுபேக்கு மேல் சேர்ந்துவிட்டிருந்தார்கள். மலைப்பாதை நந்திபாறைக்கு இறங்கும் இடம் வரையிலும் வரிசை நீண்டு நின்றது. எண்பதுபேர் வரை உட்காரும் ஹால். நான்கு வரிசைகளில் மடக்கி உட்காரவைத்து அகலமான எவர்சில்வர் தட்டு போடப்பட்டது. ஒரே நேரத்தில் நான்குபேர் சமயலறையிலிருந்து மூக்கன்களோடு சரேலென்று வெளியே வந்தார்கள். வந்தது கண்டேன் இட்டது கேட்டேன், அத்தனை வேகம். அச்சுவெல்லமும் தேங்காய்த் துருவலும் போட்ட பருப்பு பாயசம். சூடு பொறுக்க முடியவில்லை தொட்டுத் தொட்டு சப்பிப்பார்த்தேன். மீண்டும் மூக்கன்கள் வெளியே வருவது தெரிந்ததும் தட்டோடு எடுத்து குடித்துவிட்டேன். குடல்வரை கொதித்தது. அவர்கள் சாப்பாட்டை வெட்டி வீசிய வேகத்தைப் பார்க்கையில் என்தட்டில் ஏதாவது விழுமா என்பது சந்தேகமாக இருந்தது. கொஞ்சம் விழுந்தது, பின்னாலேயே வந்தது இனிக்கும் சாம்பார். வயிறு கிழிபடுவதுபோல வலித்தது சாப்பிட முடியவில்லை. கண்கள் துரு உதிர்ந்து பிதுங்கித் திறப்பதுபோல இருந்தது.

வெளியே வந்ததும் நடக்க முடியவில்லை. பொங்கி வழியும் வேர்வை, கால்கள் சில்லிட்டன. மலைப்பாதையின் பக்கவாட்டு சுவற்றில் நல்ல நிழல். நீட்டிபடுத்ததும் ஒரு ஐந்து நிமிடத்தில் எல்லாம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. இன்னும் ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும், வயிறு காலியாயிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மண்டப வாசலைப் பார்த்தேன் ஒரு பத்துபேர் இருக்கும், அடுத்த பந்திக்காக நின்று கொண்டிருந்தார்கள்.  கடைசி ஆளாகப் போய் நின்றேன்.

“சவத்துக்கு இன்னும் பசி அடங்கலையோ?” என்ற குரல் கேட்டது முதுகுக்குப் பின்னால்.

நன்றி : பதாகை 

No comments: