கவிதை எனும் வேதாளம்

முடிவிலியென உறைந்திருக்கும்  
காத்திருப்பின் அலமாரியிலிருந்து
சட்டென இன்று
தனித்துத் தெரியும்
ஒற்றைப் புத்தகத்திற்குள்
குவிந்து விழுந்தெழுந்து மனம்
கொத்திக்கொண்டுவரும் ஒற்றைவரியில்
எஞ்சியிருக்கிறது
ஒரு வேதாளத்தின் கைவெப்பம்

அந்த வெப்பத்தில் வேர்விடுகின்றன
எப்போதோ விழுந்த விதைகள்,
முளைவிடுகின்றன குருதியும் கோழையும் வடியும்
உதிரிச்சொற்கள்  

மெல்ல மெல்ல உறக்கத்தில் நழுவும்
நள்ளிரவில் கவனித்தால்
யாரோ யாரையோ முத்தமிடும் காட்சி
மனதின் எல்லாப் பக்கங்களிலும்
வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது

எந்தபெண்ணோ நிராகரித்து
வீதியில் வீசிவிட்டுப்போன ஒரு பூவின்மீது
வண்டிச்சக்கரம் ஏறி நசுக்கும்
‘சதக் சதக்’ சத்தம்
நிகழ்ந்து நீண்டுகொண்டே இருக்கும் காலத்தின்
ஒவ்வொரு கணப்பிரதியிலும் ஒலிக்கிறது

பழுக்கக்காச்சிய கம்பியின்மீது வந்தமரும்
பட்டாம்பூச்சிகளைப்போல
உதிக்கும் சொற்களெல்லாம்
உதிர்ந்து விழுகின்றன

சற்றும் தளராத மனம்
தனித்து நடக்கத் தொடங்குகிறது
சூரியன் உலவாத இடமோ காலமோ நோக்கி

இருள் வழியும் மரக்கிளையில் எங்கோ
தலைகீழாகத் தொங்கும் வேதாளம்
மௌனம் குவியும் ஒரு கணத்தில்
மெல்ல மண்டைக்குள் புகுந்துகொண்டு
எனக்காக முன்வைக்கிறது
ஒரு புதிர்க்கேள்வியை

ஆரத்தழுவும்
ஆயிரம் கணங்களில் ஒரு கணத்தில்
காதல் பழுத்துதான்
காற்றோடு போகிறதா இலை,
வெறும் காலம் முடிந்தா?
என்று.

கேள்வியின் கனம் தாங்காது அதை
கிறுக்கி வைக்கிறேன் காகிதத்தில்
உயிர்கொண்டு நெளிகிறது
ஒவ்வொரு வரியும்

மௌனம் கலைந்ததென்று
மறைந்துவிட்ட வேதாளத்தைத்தேடி
மீண்டும் நுழைகிறேன்
மனவெளியின் அடர் இருளுக்குள்.

-----
நன்றி : சொல்வனம்

ஞானத்தெருநாய்














வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.

---
நன்றி : பதாகை

வீடு திரும்பும் கால்கள்

11910819_879659515421582_37865010_n.jpg


இங்கே முடிகிறது
பாதையும் பாதமும்விட்டு
பாதுகை பிரியும்படி என் பயணம்

காலம்வந்து இடம்பெயர்த்துவிட்டது
என் இருப்பை
காத்திருப்பின் இருக்கையிலிருந்து.
யாருக்காகவோ காத்திருக்கவும் தொடங்கிவிட்டது
இந்த நுண்கணத்து வெற்றிருக்கை

பாதச்சுமையாகவோ
பாதைத்துணையாகவோ இருந்த
அடையாளங்கள் அனைத்தும்
அறுந்து வீழ்கின்றன
ஆண் பெண்ணென்ற பேதமும்
அர்த்தமற்று களையும் இந்த புள்ளியில்

மனதின் நுனியாலும்
மடமையின் வேராலும்
வாழ்ந்துமுடித்த காலமனைத்தும்
மடித்து வீசப்படுகிறது
நேற்றைய செய்தித்தாளென

அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கான அழைப்பு வாசகம்
திறந்தபடியே காத்திருக்கிறது - நான்
எப்படியும் திரும்பிவிடுவேன் என்பதற்காக
மரணத்தின் வீடு.

---
நன்றி : வல்லமை

யாளியும் அன்னமும்



















விசையுற்று விரிந்த சிறகு
அசைவற்று உறைந்த கணத்திலேயே
ஆயிரம் ஆண்டுகளாய் நிற்கிறது
இந்த அன்னம்

அதன் முதுகின்மேல்
துருத்திய கண்களோடும்
தூக்கிய கால்களை
பிளந்து முளைத்த
தும்பிக்கையோடும் விழிக்கிறது
ஒரு யாளி

இரண்டுக்குமிடையில்
எதிர்த்தூண் மன்மதன்
எய்யும் மலர் அம்புக்காய்
காலங்காலமாய்
காத்துநிற்கிறாள்
ரதி

மலர்க்கணை துளைக்கையில்
இவள் மார்பு சுரக்கும்பாலை
தனித்துப்பருகவே
தவமிருக்கும் அன்னம்

இதன் உன்மத்த வெப்பம் மேலேறி
ஊறி உறைகிறது மதநீர்
மண்டபத்தை தாங்கிநிற்கும்
யாளியின் மண்டைக்குள்

இந்த நித்தியகாம நெடுந்தவத்தின்
எதிர்புறத்தில் நிற்கிறான்
மூக்குடைபட்ட மன்மதன்

நீண்டு வளைந்திருக்கும்
அவன் கரும்பு வில்லில்
கணைகள் ஏதும் மீதமில்லை
கண்டீரா?

-----
நன்றி : வல்லமை

ஊறுகாய் பாட்டில்




















ஊறுகாய் பாட்டிலின்
அடிப்புறத்தில் எப்போதும்
தன் கையொப்பமிட்ட கடிதத்தை
வைத்து அனுப்பிவிடுகிறது வீடு

மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும்  
வெளிக்கிளம்பி அறையெங்கும்
தன் நினைவை ருசியை
ஊறச்செய்தபடி இருக்கும்  

அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என
முந்நூறு மணி அடித்ததும்
தரைதட்டுகிறது கரண்டி
தானே திறந்துகொள்கிறது கடிதம்

பின்பு யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல்
ஒருங்கமைகிறது அறை
சலவையாகின்றன சட்டைகள்
எங்கிருந்தோ வந்துசேர்கிறது பணம்
சேகரமாகின்றன மிட்டாய்கள்

சிக்கனவிலை பயணச்சீட்டுகள் அச்சாகி
மேசைமேல் கிடக்கின்றன
காவிரியில் குளிக்கப்போய்விடுகிறது மனது

வீடுதிரும்புகிறது மீண்டும்
கழுவி துடைக்கப்பட்ட
ஊறுகாய் பாட்டில்.

------

நன்றி : திண்ணை

இன்னும் ஒருபிடி அவல்


















எங்கிருக்கிறாய்
என் தோழனே குசேலா
துவாரகை  வனம்கிடக்கும்
தனியன் கிருஷ்ணன்தான்
எங்கிருக்கிறாய் இப்போது

ஒருபிடி அவலை
எத்தனை யுகங்களுக்கு
மெல்வது?


நீல நரம்புகள் புடைத்து தெறிக்க
பாதத்தில் இறங்கிய பாணம்
பச்சை விஷத்தை மட்டும் ஏற்றிவிட்டு
நெளிந்து கிடக்கிறது துருவேறி


மரணமும் கைவிட்டதோ உன்
மனத்திலும் என் பெயரழிந்ததோ
திசையும் தொலைவும் இருண்டதோ
காற்றுக்கும் என்குரல் கசந்ததோ
உன்னை கண்டு சொல்ல


யுகாதி யுகங்களாய் மங்கைகள் புலம்பும்
காதல் மொழிகளெல்லாம்
காற்றில் சாபமென நெடியேறி
சூழ்ந்து நெறிக்கும் குரல்வளையில்
குழலின் இதயம்தொடும்
சிறுதுளி காற்றுக்கும் இடமில்லை  


அவர்கள் ஓயாது உருகிவடிக்கும்
கண்ணீரெல்லாம் ஒன்றுகூடியோடும்
யமுனையின் மறுகரையில்
என்றோ எனை கைவிட்டு கரையொதுங்கிவிட்டது
என் காதலின் மோட்சம்


பீலியின் கண்ணிலும் பூவிழுந்துபோனது
நீலம் என்பதோ வெறும்
நினைவென்றானது
சாகாது துடிக்கும் நாகத்தின் உடலை
சல்லடையென துளைக்கும்
ஆயிரம் எறும்புகள் நண்பா
மரணத்திற்கு குறுக்கே நிற்கும் மணித்துளிகள்


எங்கு திரும்பினும் காண்பது யாசிப்பின் கைகளே
எத்திசை காற்றிலும் தேவையின் குரல்களே
போரும் வெற்றியும் போகத்தில் உச்சமும்
ஆற்றலும் அதிகாரமும் உறவும் உரிமையும்
நலமும் பலமும் காமமும் ஞானமும்
எத்தனைகோடி சலிப்புறு சில்லறைகள்
மன்னன் நான்
மைத்துனன் நான்
காவலனும் காதலனும் நானேதான்
சாரதி நான் சகலமும் நான்
செயலும் செய்வினையும்
சூத்திரமும் சமைத்துண்ட பாத்திரமும் நானே
யாரும் குறைசொல்ல ஏசிச் சாபமிட
எஞ்சிய கற்றூண் மட்டும்நான்


எனக்கென என்ன தருவாய்
என்று நான்போய் கேட்க  
யாருண்டு உன்னைவிட்டால்
நானே தொடங்கிய விளையாட்டென்றாலும்
தானே முடியும்வரை விடுதலையில்லை


பொம்மைகளால் கைவிடப்பட்ட
பிள்ளையென ஆகிவிட்டேன் குசேலா
நீள்கடல் துறையைநான்
நீந்தித்தொடும் நாள்வரையில்
கொறித்து மெல்வதற்கு மீண்டும்
ஒருபிடி அவல் கொண்டு வருவாயா?

-----
நன்றி : இன்மை