உலர்ந்துருகும் வேனில்



இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்கியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.


----------
நன்றி : பதாகை


சோப்புநுரை வானங்கள்













வானத்து நிறங்கள் காட்டும்
சோப்புநுரை குமிழுக்கு
உள்ளேயும் வெளியேயும்
எனது முகங்கள்

நான் கீழிருந்து மேல்பார்த்தால்  
மேலிருந்து கீழ்பார்க்கிறது
எனது முகமே கொண்ட
பரவெளியின் பேருருவம்

பிம்பங்கள்  கண்பொருந்தும் கணத்தில்
காற்று நுழைந்து உடைக்கும்  வானம்
சூன்யத்தில் சேரும்பொழுதில்
இரண்டில் ஒரு நான்
இல்லாமலாகிறேன்  

அங்கிருந்தும் மேல்திரும்பி
வானம்பார்த்தால் தெரிகிறது
கீழ்பார்க்கும்
அதே முகம்கொண்ட
பிரம்மாண்டம்.