எதற்காக எழுதுகிறேன் ?  - காலத்தைக் கருவுறும் விதைகளை கனவின் உலகங்களிலிருந்து சேகரித்தல்.


காலடி மண்ணில் கவனிக்கபடாமல் கிடக்கும் மகரந்தச் செறிவை, மண்துகளின் நுண்ணிடைவெளியில் தன் உடலால் அளந்து உமிழால் செரித்து உலகுக்குக் காட்டும் மண்புழுவைப் போலவே நான் எழுதுவதென்பதும். பூமிப்பரப்புக்கு  மேலே கொஞ்சம் புடைத்துத் தெரியும் அந்தப் புழுவின் எருக்குமிழ் போல, உணர்வின், மொழியின் தரைத்தளத்திலிருந்து துருத்தித் தெரியும் குரல்.

அட்ச தீர்க்க ரேகைகளோடு வரைந்தளிக்கபட்ட வாழ்வும் அதன்மீது நாமே வலிந்து சுமந்துகொண்ட இலக்குகளுக்கும் பின்னே அலைகையில், தனக்கேயான உலகத்தை மனம் ஒரு கூட்டுப்புழுவென பின்னிக்கொள்கிறது. பணமாகும் பட்டுப்புழு எப்படி ஒருபோதும் தன் கூட்டை உடைப்பதே இல்லையோ அப்படியே சில்லறை வெற்றிகளுக்குப் பின்னால் அலையும் மனங்களுக்கும் சிறகு முளைப்பதேயில்லை.

திசைகளைத் திமிறிச்செல்லும் சிறகுள்ள மனங்கள் மட்டும், அழகும் வலியும் நிரம்பி வழியும் புதிய உலகங்களைக் கண்டுகொள்கின்றன. அந்தக் கனவு உலகங்கள், எப்போதுமே நிச்சயிக்கப்பட்ட மாறிலிகளால் இயங்கும் புழுவின் கூடுபோல இருப்பதில்லை. இந்தத் தரிசனம் தரும் திடுக்கிடல் கிளர்த்திவிடும் நிலைக்கொள்ளாமையையே எழுதி எழுதிப் பார்த்து மொழியில் தன் உலகத்தை வரையறை செய்யமுயல்கிறது மனம். உலகம் பிதுங்கி வழியும் மனித நெரிசலிலும் இந்த உணர்வின் உலகங்கள் மட்டும் எண்ணற்ற பரிமாணங்களில் பிரிந்தே கிடக்கையில், புனைவின்மொழி எனும் ஒற்றைச் சாத்தியமே இவற்றை ஒன்று கோர்க்க எஞ்சியிருக்கிறது.    
நுண்மை, பிரம்மாண்டம் எனும் துருவமுடிவிலிகளுக்கு இடையில் நிகழும் முடிவற்ற தாவல்களே என் மனவெளி. அதீத்தால் மட்டுமேயான அந்த பெருவெளிக்குள் நிகழும் பயணங்களின் குறிப்புகளையே கவிதைகளாக எழுதுகிறேன். அவை நான் கண்டடைந்த கனவு உலகங்கள் பற்றிய அனுபவக் குறிப்புகள் மட்டுமல்ல. யாரும் எப்போது விரும்பினாலும் அங்கே   திரும்பிச்செல்வதர்க்கான வரைபடமும் கடவுச்சொற்களும் அடங்கிய ரகசியமும் கூட. அந்தக் கனவுகள் சூல் கொள்ளும் காலத்தையும் உணர்வையும் கருவில் கொண்ட விதைகளே நான் எழுதிச்சேர்ப்பவை. நித்தியமும் அகாலத்தில் உறைந்திருக்கும் அந்த உலகங்களை அடையும் ஆயிரம் வழிகளையும் சொல்லிவிடவே முயல்கிறேன். அதை உணர்ந்து நெருங்கும் வாசிப்பு, வாசிப்பவர்க்கு ஒற்றைச் சாளரத்தையேனும் திறக்குமென்பதே என் நம்பிக்கை. அப்படியோர் சிறகு என் அந்தகாரத்தின் தனிமைக்குள் ஒலிக்குமென்றே காத்திருக்கிறேன்.

மேலும், தனிமையைப் பற்றியே நான் அதிகம் எழுதுவதாக சொல்லப்படுவதை அறிகிறேன். தனிமை மட்டுமல்ல இரவும் என் எழுத்தில் எப்போதுமிருக்கும் பாத்திரம்தான். ஏனெனில், இரவும் தனிமையும்போல நான் அணுகியறிந்தவை ஏதுமில்லை. பகலென்பதும் வாழ்வென்பதும் எனக்கென்றும் தெளிவற்ற கனவுகளே. தனிமைக்குள் உறையும் இரவென்பதும் கனவென்பதுமே எனது நித்திய சஞ்சாரம். அந்தக் கருவறையின் வாசனை என் மொழியில், குரலில், ஒலிப்பதை தவிர்ப்பது கடினம். மேலும் இந்தத் தனிமையின் நிறத்தை, மணத்தைப் பாடும் ஆயிரம் பாடல்களே என்னில் கிடந்து அலைக்கழிக்கும் விசைகள். அவற்றைப் பாடித்தீர்ப்பதொன்றே இந்தப் பறக்கத்துடிக்கும் புழுவிற்கு இறக்கை முளைத்து பட்டாம்பூச்சியாகும் வழி. அதுவே என்னை எழுதவும் செய்கிறது.

----------

நன்றி : பதாகை