எந்த நதி ?



 மாலை நேரங்களை இழந்த வாழ்வு எப்படி இருக்கும். சாயங்காலங்களை இழப்பது எவ்வளவு துயரமானது என்பதை இயந்திர நகரத்தின் மத்தியில் கிடக்கும் திறந்த இதயத்தால் உணர முடியும். நதிக்கரையில் பிறந்து பெருவெளியில் அலைந்த மனம் வானத்தை பார்ப்பதே அரிதான இடத்தில் என்னவாகும்கட்டிடங்களும் கணிணியும் புழுதியும் இரைச்சலும் தவிர எதுவும் இல்லைபெருநகரத்தின் மாலை  வெறும் களைப்புறும் பொழுது.



கடந்த காலத்தின் மாலைகள் மிகவும் விசாலமானவை  காவிரி  நதியைப்போல. நான் மாலைகளை பார்த்ததும் பருகியதும் இந்த பெரும் மணல் வெளியில்தான். ஞாயிற்றுகிழமைகளின்  மாலைகள் மிகவும் விநோதமானவை. இது காதலியின் அருகில் இருக்கையில் ஓடும் கடிகாரத்தை போன்றது. காதல் வரும்போது மட்டுமே திங்கள் கிழமைகள் அழகாகின்றன. ஒருவேளை அப்போது மட்டும் ஞாயிற்றுகிழமைகளின் மாலைகள் வேகத்தை இழக்கலாம்

                 பிரிந்து செல்லும்  காதலி
                 நடந்து மறையும் வீதியை போல
                 உறைந்து இருளும் மேற்கை
                பார்த்துகொண்டே இருப்பேன்.

ஞானத்தை தேடும் மனதிற்கு மாலைகள் சுதந்திர பொழுது. கல்லூரியில் சுரேஷ் என்றொரு அண்ணன் எனக்கு ஒரு குருஅவர் சொல்வார் மாலைப்பொழுதுகள் உனது முதல் மூலதனம் என்று. அவர் தனியே பேசக்கூடியவர் என்று எல்லோரும் கேலி செய்வார்கள். நானே பார்த்திருக்கிறேன் பலமுறைஷேக்ஸ்பியரும், கிப்ரானும் அவர் வழியாகவே எனக்கு புரிய ஆரம்பித்தார்கள். அவரோடு நான் அமர்ந்து பேசிய எந்த மாலையும் இன்று வரை இருளாதவை. அவர் கல்லூரியை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னை அழைத்துக்கொண்டு ஒரு பக்கம் மட்டும் வழி இருக்கும் ஒரு  குளத்தின் தீவில் உள்ள  ஆலமரத்திற்கு சென்றார். அவர் பெரும்பாலான மாலை நேரங்களில் அங்கு செல்வதை பார்த்திருகிறேன். நீண்ட நேரம் எதுவும் பேசாமலே இருந்தோம். அவராக சொல்லாத வரையில் நானும் எப்போதும் கேட்பதில்லை எதையும்.


அரை மணிநேரம் சென்றிருக்கும் ஒரு குயில் மிகவும் தயங்கியபடி தரையில் வந்து உட்கார்ந்தது. என்னையே உற்று உற்று பார்த்தபடி அவரை நோக்கி நடந்தது. அதை தன் தோழி என்றார். இரண்டு ஆண்டு பழக்கம் என்றார். அவர் அன்று சொல்லிய  எதையும் புரிந்து கொள்ளும் திறனும் நம்பும் தைரியமும் எனக்கில்லை. ஆனால் இதயத்தின் மொழி எவ்வளவு நுட்பமானது என்பதைபற்றி சிந்திக்க தொடங்கிய மாலை அது. பசியோடு நூலகங்களில் கிடந்த மாலைகளில் நானும் பேச ஆரம்பித்திருந்தேன் புத்தகங்களோடு.


                                      ஒவ்வொரு காலையிலும்
                                    
தன்னை அலங்கரித்துக்கொண்டு நிற்கும்
                                    
பூங்காவின் செடியை போல
                                    
தூங்காமல் காத்திருகிறது
                                    
ஒவ்வொரு புத்தகமும்
                                    
தனக்கான வாசகனுக்காக

காலத்தில் பின்னோக்கி நகர்கையில் மனம் மாலை பொழுதுகளை ஒரு நதியை போல காண்கிறது. அனுபவத்தின் மயக்கம்தான் என்றாலும் மாலை எனக்கொரு நதியாகவே இருக்கிறது. இன்று தொலைந்துவிட்ட எத்தனையோ நதிகள் நம் நினைவில் என்றுமே வற்றுவதில்லை. நதிகளின் சாரலும் குளிர்ச்சியும் நினைக்கும்போதே வந்து நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும். நான் நினைத்து ஏங்கும் மாலைகளும் நினைவில் வற்றாத நதியாகவே இருக்கிறது. பெரு நகரத்தில் மாலைகள் வெறும் குப்பைகளாய் சேர்கிறது மனதில். அந்த நதி அழகற்றது.


                     ஒருநாளேனும்  வருவாயா
                     உன் மகளை அழைத்துக்கொண்டு
                     என்னோடு விளையாட
                     மணலும் தீர்வதற்குள் 
                      என்றது  நதி.





                    மேற்கிலே இட்டுவைக்கிறேன்
                    உனக்கான கையெழுத்தை
                    கொஞ்சம் பூக்களோடும் வண்ணங்களோடும்
                    பூக்கள் பறந்து மீன்களாகின்றன
                    வண்ணமும் மறைந்து இருள்கிறது
                    காத்துக்கொண்டே இருக்கிறேன் தினமும்
                     என்கிறது
மாலை.