நான் எனும் நிகழ்வு



உலகம் எனும் சிறு நிகழ்வில்
நான் எனும் நுண் நிகழ்வு
ஒரு எஞ்சிய குப்பையா
மகரந்தத்  துகளா

எப்படியும் காமமே இந்த
நிகழ்வின் மீது வீசும் காற்று.

இருப்பு எனும் திசையிலி படகில்
சிந்தனை என்பது
துடுப்பேதானா அல்லது 
தோன்றி மறைந்து
மீண்டும் வேறிடம் தோன்றும்
நீர்ப்புகும் துளையா

எப்படியும் காலமே இதன்
விடையிருக்கும்
முத்திரையிடப்பட்ட குடுவை.

வாழ்வெனும் கட்டற்ற நதியில்
உறவுகள் என்பது
அணையிடும் கரையா
கரைபடும் மணலா

எப்படியும் அன்பு ஒன்றுதான்
நதியின்
ஈரம் நிலைக்கும் பள்ளம்.


கால நிகழ்வெளியின் ஆதி மையம்














அதற்குமேலும்
பிரிக்கவோ விரிக்கவோ முடியாத
புள்ளியொன்று
தனக்குள்ளே சுழன்றுகொண்டு 

அண்டமெங்கும் சிதறிக்கிடந்த
கண்கள்வழி
தன்னையே பார்த்துக்கொண்டது 

அதற்கு தனிமையில்லை - ஏனெனில்
அது தானே இல்லையென்று நினைத்தது 

தன்முனைப்பால்
சிதைந்து குழம்பிய மையம்
கடைசியாய் மனிதனை பிரசவித்தபோது
இறந்ததாய் சொல்லப்படுகிறது 

அதன் ஆவி
இன்னும் இங்கு உலவுவதாய்
புத்தன் போன்றோரால்
நம்பவும் படுகிறது 

தன் நினைவடுக்கை காலம் எனவும்
நிகழ்விருப்பை வெளி எனவும்
அதுவே பின்னாளில் பெயரிட்டதால்
இறந்திருக்க வாய்ப்பில்லை என
அறிவியலும் சொல்கிறது. 

எஞ்சியிருந்த ஊடல்

இரவு இன்னும் மிச்சமிருக்கும் அதிகாலையில்
சோம்பல் முறிக்கிறது காமம்
தீரத்தழுவுகையில் விழித்துக்கொள்ளும்
எஞ்சியிருந்த ஊடல்
திரும்பிப் படுத்துக்கொண்டது.

அதன் எடை
அசைக்கவும் முடியாதது.


முகநூல் முனி

 
முகநூலைக் கடித்து
மூன்று வேலையும் தின்னும்
தற்குறி முனியொன்று தான்வந்து பதிவிடும்
கேளுங்கள் பதர்களே என்று

ஆயிரம் வரிகளில் நீளும் ஆய்வுப்பதிவுகள்
அறிஞனை அசடனென்றும்
போகியை புத்தனென்றும் பொய்யர நிறுவி

படிக்காத நூல்களுக்கும் பதவுரை எழுதும்
பதர்களுக்குத்  தெரியுமா என்ன
பதிவுக்கு நகல் தந்த மூலப்பதிவு

ஆன்மீக ஆய்வுகளோ ஐந்து தளம் மீண்டெழும்
'பத்துப் பதிவுகளில் பரமனை அடைவதெப்படி'
'பாபாவின் மாமாவும் பச்சைத்தமிழனே'

உன் அப்பன் தமிழனென்றால்
ஒப்புகொள்,  உடனே  விரும்பு
பகிர்ந்து விடு இதை என்றும் மிரட்ட

ஆயிரம் வேண்டா 'விருப்பு'களுக்கும்
ஐம்பது நூறு 'போற்றி'களுக்கும் பிறகு வந்தது
எதிர்க்குரல் முனியொன்று

பாபாவின் மாமா தமிழனோ  தானறியேன்
ஆனால் மாமி ஒரு மலையாளி
ஒரு காதல் கதைக்கே கால்முளைத்தது

மீண்டும் ஆயிரம் 'விருப்புகள்', 'போற்றிகள்'
மூண்ட மொழிப்போரில் மாண்ட சரித்திரத்தை
தோண்டிப் புதைத்தது  பின் வந்தப்  பெரும்படை

தோழி வேட்டையில் உலகம்சுற்றி தோல்வியுற்று
கடைசியில் தனது பொய்க்கணக்கை
தானே காதலித்த கூட்டத்தில் சேர்ந்து

உலக அழகிகளின் முகத்தைப் பெயர்த்தெடுத்து
ஒட்டிக்கொண்டதேவதைகளை
போற்றிப்பாடப்  போய்விட்டது அந்த முனி.










நெஞ்சில் விழுந்த முடி



கங்கையின்  குறுக்கே  விழுந்த
வாலியின் வாலாகக் கணக்கிறது
காற்றில் கலைந்தெழுந்து
கன்னத்தில் விழுந்த
ஒற்றை முடி