அகன்ற பெருவெளியில்
மழை கண்டு நனைதல்
மயக்கும் ஒரு தவம்
மழையில் கரையாதது
எதுவுமே இல்லையோ
எனத்தோன்றுகிறது
மலையே நுரைத்து மேகமாவதும்
கடலே எழுந்து காற்றாவதும்
காற்றே கரைந்து நீராவதும்
எல்லாம் கரைந்து
மனமும் கரைந்து
நீர்மயமாகி துன்பமும் நீர்த்துவிடுகிறது.
முடிவிலா பெருவெளியில்
மழை நடுவில் நிற்கையில்
நீரின் பெருமூச்சு
ஒவ்வொரு மண் துகள் மீதும்
அறைந்து வலிக்க அழுவது
புணர் வலி ஓலம் போலவே கேட்கிறது.
பற்றி எறிவது போல
நீளும் நீர்க்கரங்கள் முன்
உயிர்களைனைத்தும் ஒடுங்கி உள்ளடங்கி
மீண்டும் உயிர்ப்புறும்
அமைதி சில்லிடுகிறது.
தனித்த மரங்களின் தலைகள்
மந்திரத்தில் ஆடுகின்றன
உருளும் கற்கள்
குளிர்ந்து குன்றுகின்றன .
மழை மண்ணைப் புணரும் நெடி
திசையெங்கும் பரவுகிறது.