வீடு திரும்பும் கால்கள்

11910819_879659515421582_37865010_n.jpg


இங்கே முடிகிறது
பாதையும் பாதமும்விட்டு
பாதுகை பிரியும்படி என் பயணம்

காலம்வந்து இடம்பெயர்த்துவிட்டது
என் இருப்பை
காத்திருப்பின் இருக்கையிலிருந்து.
யாருக்காகவோ காத்திருக்கவும் தொடங்கிவிட்டது
இந்த நுண்கணத்து வெற்றிருக்கை

பாதச்சுமையாகவோ
பாதைத்துணையாகவோ இருந்த
அடையாளங்கள் அனைத்தும்
அறுந்து வீழ்கின்றன
ஆண் பெண்ணென்ற பேதமும்
அர்த்தமற்று களையும் இந்த புள்ளியில்

மனதின் நுனியாலும்
மடமையின் வேராலும்
வாழ்ந்துமுடித்த காலமனைத்தும்
மடித்து வீசப்படுகிறது
நேற்றைய செய்தித்தாளென

அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கான அழைப்பு வாசகம்
திறந்தபடியே காத்திருக்கிறது - நான்
எப்படியும் திரும்பிவிடுவேன் என்பதற்காக
மரணத்தின் வீடு.

---
நன்றி : வல்லமை

யாளியும் அன்னமும்



















விசையுற்று விரிந்த சிறகு
அசைவற்று உறைந்த கணத்திலேயே
ஆயிரம் ஆண்டுகளாய் நிற்கிறது
இந்த அன்னம்

அதன் முதுகின்மேல்
துருத்திய கண்களோடும்
தூக்கிய கால்களை
பிளந்து முளைத்த
தும்பிக்கையோடும் விழிக்கிறது
ஒரு யாளி

இரண்டுக்குமிடையில்
எதிர்த்தூண் மன்மதன்
எய்யும் மலர் அம்புக்காய்
காலங்காலமாய்
காத்துநிற்கிறாள்
ரதி

மலர்க்கணை துளைக்கையில்
இவள் மார்பு சுரக்கும்பாலை
தனித்துப்பருகவே
தவமிருக்கும் அன்னம்

இதன் உன்மத்த வெப்பம் மேலேறி
ஊறி உறைகிறது மதநீர்
மண்டபத்தை தாங்கிநிற்கும்
யாளியின் மண்டைக்குள்

இந்த நித்தியகாம நெடுந்தவத்தின்
எதிர்புறத்தில் நிற்கிறான்
மூக்குடைபட்ட மன்மதன்

நீண்டு வளைந்திருக்கும்
அவன் கரும்பு வில்லில்
கணைகள் ஏதும் மீதமில்லை
கண்டீரா?

-----
நன்றி : வல்லமை

ஊறுகாய் பாட்டில்




















ஊறுகாய் பாட்டிலின்
அடிப்புறத்தில் எப்போதும்
தன் கையொப்பமிட்ட கடிதத்தை
வைத்து அனுப்பிவிடுகிறது வீடு

மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும்  
வெளிக்கிளம்பி அறையெங்கும்
தன் நினைவை ருசியை
ஊறச்செய்தபடி இருக்கும்  

அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என
முந்நூறு மணி அடித்ததும்
தரைதட்டுகிறது கரண்டி
தானே திறந்துகொள்கிறது கடிதம்

பின்பு யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல்
ஒருங்கமைகிறது அறை
சலவையாகின்றன சட்டைகள்
எங்கிருந்தோ வந்துசேர்கிறது பணம்
சேகரமாகின்றன மிட்டாய்கள்

சிக்கனவிலை பயணச்சீட்டுகள் அச்சாகி
மேசைமேல் கிடக்கின்றன
காவிரியில் குளிக்கப்போய்விடுகிறது மனது

வீடுதிரும்புகிறது மீண்டும்
கழுவி துடைக்கப்பட்ட
ஊறுகாய் பாட்டில்.

------

நன்றி : திண்ணை