பசித்த பகல்

பசி என்பது வெறும்
உண்பதற்கு முன்பிருக்கும்
உணர்வல்ல
 
அழுந்தக் குத்தும் முள் -
பசியை விழுங்கும் போது
தொண்டையில் கசியும் வலி
நெஞ்சில் ஆறாத் தழும்பாகும்
 
யாரும் அறியாமல்
தனிமைபடுத்தும் -
இயலாமையில் கை நடுங்கும்
 
பசி தரும் வலியில் மட்டுமே
மனிதன் அழும் சக்தி இழக்கிறான்
 
பசி உடலை விடவும்
உள்ளத்தை ஆழத் தைக்கும் நோய்
 
தொடர் பசியில்
தொண்டையில் இறங்கும் நீர்
இரத்தக்குழாயை கீறிடும் ஒலி
காதுகளுக்குக் கேட்காமல்
அடைத்துவிடும்
 
கண்களில் தெரியும்
பசித்தவர்களுக்கு மட்டும்.

முடிவுறாக் கணம்


நீ என் கனவுக்குள்
நுழையும் கணம்
ஒரு முடிவுறாக் கணம்

மீப்பெரு காதல்


மீப்பெரு காதலின் ஈவு
கண்ணீராகும் பிரிவில்
மீச்சிறு இன்பம்
முத்தம்

பெருவெளி மழை

அகன்ற பெருவெளியில்
மழை கண்டு நனைதல்
மயக்கும் ஒரு தவம்

மழையில் கரையாதது
எதுவுமே இல்லையோ
எனத்தோன்றுகிறது

மலையே நுரைத்து மேகமாவதும்
கடலே எழுந்து காற்றாவதும்
காற்றே கரைந்து நீராவதும்

எல்லாம் கரைந்து
மனமும் கரைந்து
நீர்மயமாகி துன்பமும் நீர்த்துவிடுகிறது.

முடிவிலா பெருவெளியில்
மழை நடுவில் நிற்கையில் 
நீரின் பெருமூச்சு
ஒவ்வொரு மண் துகள் மீதும்
அறைந்து வலிக்க அழுவது
புணர் வலி ஓலம் போலவே கேட்கிறது.

பற்றி எறிவது போல
நீளும் நீர்க்கரங்கள் முன்
உயிர்களைனைத்தும் ஒடுங்கி உள்ளடங்கி
மீண்டும் உயிர்ப்புறும்
அமைதி சில்லிடுகிறது.

தனித்த மரங்களின் தலைகள்
மந்திரத்தில் ஆடுகின்றன
உருளும் கற்கள் 
குளிர்ந்து குன்றுகின்றன .

மழை மண்ணைப் புணரும் நெடி
திசையெங்கும் பரவுகிறது.

சில்லறை இதயம்


பிச்சை பாத்திரமும்
பிஞ்சு முகமும் எதிர்வரும் -
கைகளோ
சில்லறை இதயம் தொட்டுப்பார்த்து
இல்லையென்றுதான்
சொல்லும்.இடர் மழை


நகர வெளியில்
இடமின்றி
சுருங்கிவிடுகிறது
காதலைப்போல மழையும்.