கவிதை வந்து விழும் கணம்

கவிதை வந்து விழுகின்ற கணத்தில்
காலம் இடம் களைந்து
நிர்வாணமாவதே முதல் வினை

கனவுக்குள் அமிழும் கணம்தோறும்
உடைகள் உதிர்கின்றன

பறந்துவந்து இறங்கும்
உதிரிச்சொற்கள் ஒவ்வொன்றும்
கவிதையை நோக்கி கைகாட்டிவிட்டு
அதிர்வின்றி அமர்கின்றன
தும்பிகளைப்போல

வயதும் பாலும் குணமும் கலைகிறது
உதிரிச்சொற்கள்  ஒளியிழக்கின்றன
மொழியும் உதிர்கிறது பதட்டமாகிறேன்

அகமும் உடைந்து
ஒவ்வொரு சில்லும் உருகிட
‘நான்‘ கலைந்து இருண்டபின்
கவிதை மட்டும் இருந்தது

நீண்ட இடைவெளிக்குப்பின்
பிசுபிசுவென்ற திரவத்திற்குள்
எங்‌கோ துடிக்கிறது இதயம்

உயிர்ப்பிக்கும் ஒரு பெருமூச்சிற்குப் பிறகு
கனவை உடைத்துக்கொண்டு
வெளியேறி

சிதறிக்கிடக்கும் உதிரிச்சொற்களின்
கோடிட்ட இடங்களை
வலிந்து நிரப்புகிறேன் - ஒரு
பயணக்கட்டுரையைப் போல.

மீண்டும் காத்திருக்கிறேன் - தானே
ஒரு கவிதை வந்து விழும் கணத்திற்காக.“சொல்வனம்“  இதழில் பிரசுரமான கவிதை.


இணைய இதழ்
http://solvanam.com/?p=35209சொல்வனம்

ஊசித்தும்பி
ஒரு தேன்துளியின் எடையில்
கால்பங்கே இருக்கும் ஊசித்தும்பி

அதனினும் மெல்லிய
அளவிலும் நுண்ணிய
நெல் பூவில் வந்து ஒட்டுகிறது

கடுகினும் சிறியதுளி
தேன்கண்டு உண்டபின்பு

மின்னணுவின் துரிதத்தில்
கண்ணுக்குச் சிக்காமல் படபடக்கிறது
அதன் கண்ணாடிச் சிறகு

தொடுவானம் வரை இருக்கும்
நெல்வயலின் ருசி - அந்தத்
தும்பிக்குள் விழுந்து பறக்கிறது.இரவுக்குத் தப்பிய வானம்


நீர்ப்பரப்பின்  தொடுவானத்தில்
கீழிறங்கும் ஆகாயம்
நடுங்கும் நீரலைகள்  மேல்
நெளியும் பாம்புகளாய்
ஊர்ந்து வந்து
கால்களில் ஏறுகிறது

இரவுக்குத் தப்பிய வானமோ
நனைந்த அப்பளமாய் மிதக்கிறது.
  

காதலி வராத நாளின் வகுப்பறை


நிலவில்லாத நாளிலும் 
இரவு விழித்துதான் இருந்தது 
நட்சத்திரங்களோடு. 
காதலி வராத நாளின் வகுப்பறை

இரவுக்கு முன்பே வந்து நிலா 
வெயில் காய்வதும் உண்டு
வகுப்புகள் தொடங்காத நேரம்

ஒரு சந்திக்காலம் என்பது இதுவரை 
ஒளியும் இருளும் 
கரைந்து பிணையும் கனவே.