வீடுகள்நெடுநாட்களுக்கு முன்பு
எங்கள் எல்லோருக்காகவும்
கட்டப்பட்டது
ஒரு வீடு

அதிலிருந்து
எங்கள் ஒவ்வொருவருக்குமான
தனித்தனி வீடுகளை
பிரித்தெடுத்து
நாங்களே கட்டிக்கொண்டோம்

ஒரு கார் நிறுத்துமிடமும்
ஒரு புத்தக அலமாரியும்
ஒரு மர நாற்காலியும்
வெண்ணிற கம்பிகள் கொண்ட
ஒரு ஜன்னலும்
அதன் வழி தெரியும்
ஒரு மரமல்லி மரமும்
மூன்று செம்பருத்திச் செடிகளும்
மட்டுமே கொண்டது
என் வீடு

கார் நிற்குமிடதிற்கருகில்
சிறு கோலமிடும் வாசலும்
இருபத்து நான்கு புட்டிகள் அடுக்கிய
மூன்றடுக்கு அலமாரி கொண்ட
சமையலறையும்
நான்கு தொலைக்காட்சித் தொடர்களில் வரும்
தொண்ணூறு பேர் வசிக்கும் வீடு
என் மனைவியுடையது

காருக்கு அருகில்
ஒரு சைக்கிள் நிறுத்துமிடமும்
மாடிப்படிக்கு கீழே
கிரிக்கெட் மட்டை
வைக்கும் இடமும்
பேட்மேனும் சச்சினும்
அவனுடன் வசிக்கும் உள்ளறையும்
கொண்டது
என் மகனின் வீடு

பெரிய கார் நின்று சென்ற இடத்தில்
தன் மூன்று கார்களை ஓட்டும் இடமும்
பளபளப்பான  வெண்ணிற தரையும்
ஒரு விமானம்
ஒரு புலி
இரண்டு மான்கள் மற்றும்
ஒரு ரப்பர் பந்து
எல்லாவற்றையும் வைக்கும் அலமாரியின்
அடிப்பகுதியும் கொண்டது
என் மகளின் வீடு

மூன்று வாழை மரங்களும்
ஒரு தென்னையும்
தினம் காய்ந்துகொண்டே இருக்கும் தோட்டமும்
எப்போதும் பிள்ளைகளின்
கூச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும்
உள்வீடும் கொண்டது
என் தந்தையின் வீடு

பண்டிகை வரும்தோறும்
ஒருவர் மற்றவர் வீட்டை
முற்றாகக் கலைத்து
ஒரே வீடாக்குவோம்

மறுநாள் தொடங்கி
அடுத்த வருடம் வரை
எல்லோருக்குமான வீட்டிலிருந்து
எங்களுக்கான தனித்தனி வீடுகளை
பிரித்து எடுத்து
கட்டிக்கொண்டே இருப்போம்.

நன்றி : சொல்வனம் 
  

யாருமற்ற வீடு

உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள் 
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்

காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள் 
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்

நிறைந்து நெரிகிறது முற்றம் 
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்  
நித்திரையில்

பூத்து மடிகிறதென் தோட்டம் 
புதுமழைக்கு ஏங்கும் வேரில் 
உலர்கிறது ஈரம்

வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி 
வீதியோடு திரும்பும் காற்று 
தனித்திருக்கிறது வீடு 

 இப்போது நானும் 
அங்கில்லை.

நன்றி : எழுத்து.காம்
-------------------------------------------------------------------------------------------------------------------------

வீடு என்பதை, மனம், முதுமை, காதல் என்ற பொருள்களிலும் வாசிக்கலாம்.

தாம்பரேயில் துருவ ஒளிதாகத்தில் தூக்கம் கலைந்த நள்ளிரவு
சலிப்புற்று எழுந்தேன்
எப்போதும் போல


அரைக்கண்ணில் கீழ்வானம்
பார்த்த நொடியில்
தேன் நிரம்பிய கொடுக்கோடு
தேள் ஒன்று கொட்டியது நெஞ்சில்


விழிப்புக்கும் எனக்கும் இடையில்
வந்து விழுந்துவிட்டது வானம்
இது உண்மைதானா கனவா
ஒளிதானா
பச்சைப்புகையா
பாஸ்பரஸ் விளக்கா


சட்டென்று குளிருறைகளை மாட்டிகொண்டு
சாலையில் இறங்கி ஓடுகிறேன்
நள்ளிருளின் புள்ளியிலிருந்து
நழுவுகிறது இரவு


நாம் அறிந்ததனைத்தையும்
அபத்தமெனக் காட்டி
அழகென்று நினைத்ததையெல்லாம்
அற்பமெனச் செய்கிறது
துருவ ஒளி


ஓட்டமும் நடையுமென
ஓடிக் கொண்டிருக்கிறேன்
ஒளியொரு நதியெனப்
பாய்ந்து கொண்டிருக்கிறது வானில்


கண்களின் துல்லியம் பறிக்கும்
மின்னொளியைத் தப்பித்து
இருள் பிசுபிசுத்துக் கசியும் பாதைகளில்
பாய்ந்திறங்கி விரைகிறேன்


உறைந்து பனிமூடிய
சோலையருவி எனும் ஏரி
அதன் மத்தியில் ஒரு மரத்தீவு
இருளுக்குள் இறங்கி வானம் பார்க்கிறேன்


தொடுவானத்தின் துருவங்கள் வரை தொட்டு
விண்ணில் கிடந்து நெளியும்
பச்சைப் பாம்புகள்


ஒளிரும் பொடியென
உதிர்ந்து பொழிகிறது
அந்த ஒளியின் உடல்


தரைக்கு வராமல் தலைமேல்
தேங்கும் மழையில்
பச்சைத் தீப்பிடித்துப்
பற்றி எரிகிறது
கீழே கிடக்கும் பனி


வானத்தின் உச்சியில் தொடங்கும் புன்னகை
தொடுவானத்தின் காதுகளைக்
கிள்ளி மீள்கிறது அரைநொடியில்


இலக்கின்றி பூத்திருக்கும் மீன்களையெல்லாம்
அள்ளிச்சூடி அசைகின்றன
பால்வெளியின் மறுமுனையில் இருந்து நீளும்
பச்சைக் கைகள்


அந்தரத்தில் கால்கள் ஊன்றி
ஆகாயத்தில் தலை நுழைத்து நிற்கும்
ஒளியாலான இந்த மாளிகையில்
ஓராயிரம் தூண்கள்


மாறாத வண்ணத்தை
கரைத்துக் கரைத்துக்
காற்றின்மேல் தன்னையே வரைந்தபடி
இன்றுதான் சேலைகட்டும் குழந்தையென
திசையெங்கும் அலைகிறது துருவ ஒளி.நன்றி : பதாகை
--------------------------------------------------------------------------------------------
துருவ ஒளி – Aurora, தாம்பரே – Tampere (தென் பின்லாந்து நகரம்), சோலையருவி – Suolajärvi .


எனக்குள் நிகழும் இரவுஎனக்குள்
நிகழ்ந்தபடியே இருக்கிறது
ஒரு இரவு

நிலவுகள் மீன்களின் நிச்சயமில்லாமல்
நிகழ்ந்தபடியே இருக்கிறது
ஒரு நீண்ட இரவு

விடியல்களின் சூரியன்களை
விழுங்கியபடி
திரண்டுவரும் மேகங்களை
சூடியபடி
குளிர்ந்து உறைந்து
இறுகியபடி
அது வளர்ந்துகொண்டே இருக்கிறது

இச்சையின் வெப்பத்தில் துளிர்த்து
இருளுக்குள் காமத்தில்
சூல்கொண்ட
கணம் முதலே
எனக்குள் நுழைந்து கொண்டதுதான்

நான் சிரிக்கும் கணத்தில்
கடைசியாகத் தெரியும்
கோரைப்பல்
அந்த இரவின் நிழல்தான்

நான் உடைந்தழும்போது விழும்
முதல் துளி நீர்
அந்த இரவின்  மழைதான்

என் துணை கலைத்திருக்கும்போதும்
தூங்காமல் இயங்குவது
அந்த இரவின் மிருகம்தான்

ஒரு தும்மலுக்கும்
கலங்கி வழிவது
அங்கிருக்கும் ஈரம்தான்

உயிர்த்திருப்பதின் செலவுக்கென
நான் தேக்கிவைத்திருக்கும்
புன்னகையும் கண்ணீரும் எல்லாம்
அந்த இரவின் விளைச்சல்களே

மேலாடைச் சரிவின்
மெல்லிய பிளவு கண்படுகையில்
சட்டென சூழ்ந்து கொள்கிறதா
ஆயிரம் தவளைகள்
மழை மழை என கதறும் ஒலி

அப்படியானால்
உங்களுக்குள்ளும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது
ஒரு அடர்ந்த இரவு.


நன்றி : பதாகை


பரிசுப் பெட்டி


நீ இல்லாமலிருப்பது
எனும் மாபெரும் இருப்பு
கதவுகளற்ற அறையென
என்னை
எல்லா திசைகளிலும்
திறந்து போட்டு விடுகிறது

தூரத்தில் எங்கோ நீயும்
தூங்கும் அறையில் நானும்
தனித்திருக்கும்
இந்த நாளில்தான்

நம் அன்பின் சமன்பாட்டில்
இடம் காலம் எனும் மாறிகள்
சுழியாகின்றன
நெருக்கமோ அதன் உச்சத்தில்

நான் சொல்லாத அன்பையெல்லாம்
சொல்லியே விடுகிறேன்
நீ கேட்காத பரிசுகளைகளையும்
வாங்கிப்  பதுக்குகிறேன்
நமக்குள் நிகழாத முத்தங்களையெல்லாம்
நனைத்து வைக்கிறேன்

கடைசியாக நீ வந்து சேர்ந்த நாளில்
என்னிடம் மிச்சமிருந்தது
ஒரு மௌனம் மட்டுமே

எனக்காகவும் இருந்ததே
உன்னிடம் ஒரு மௌனம்
அந்தப் பெட்டியை திறக்காமலே
எடுத்துக்கொள்கிறேன்
எனக்கென நீ சேமித்த எல்லாப்  பரிசுகளையும்.

நன்றி : வலைத்தமிழ்.காம்


தொடரகம் – நானும் காடும்

ஒரு காடு
ஒரு மிருகம்

தானே அழித்த காட்டை
தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம்

தன்னை வெளிப்படுத்த
தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு

தான் எப்போதும் பார்த்திராத
ஆனால் எப்போதுமே போக விரும்பும்
தனக்கான காட்டில் மிருகம்
காலத்தின் சாம்பலை குழைத்து
இறந்த காட்டின் அழகைப்போல
இல்லாத காட்டில் வரைந்து பார்க்கையில்

மிருகத்திற்குள் இருக்கும் காடு விழித்துக்கொண்டு
காட்டிற்குள் இருக்கும் மிருகத்தோடு எரிகிறது

வெளிப்பாயும் தீச்சுட்ட மிருகம்
தன் அந்தரங்கப்புண்ணை நாவால் தடவியபடி
காட்டை நினைவில் கொண்ட
எல்லாவற்றையும் வேட்டையாடி
காட்டைத் தின்கிறது

பிழைத்த மிருகம் ஒவ்வொன்றிலும்
தனித்தனியே இருக்கும் காடுகளில்
பசி காமம் எனும்
இரண்டே பருவங்கள்

போக விரும்பிய காட்டில் மிருகமும்
பிரிந்து போன மிருகம் நீங்கிய காடும்
தனிமையில்

மரணிக்க அஞ்சி காட்டையே தின்ற மிருகத்தை
காடு தின்று பூக்கிறது
காமத்தின் துளிவழி
மிருகமும் எஞ்சிப்பிழைக்கிறது

பசிக்கு மீண்டும் காடு
காட்டுக்கு மிருகம்.


நன்றி : திண்ணை 


மரமல்லி
தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு

பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்

உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி

நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்

பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக

இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.


நன்றி : eluthu.comவரலாறு

காலவெளியில்
நுனிப்புல் மேய்ந்தபடி நகரும்
ஒரு கருப்பு நிற பசு

எருமை அல்ல பசுதான்
நுனிப்புல் மேய்கிறதே

மாறும் பருவங்களும்
மடிவற்றும் காலங்களும்கூட
பொருட்டல்ல
நுனிப்புல்தான் எப்போதும்

இரத்தமும் கண்ணீரும்
உப்பும் உவர்ப்புமாய் விழுந்து
படர்ந்து பூத்தபடியிருக்கும் வெளியில்

புதுப்பூவின் தேனை
தெரியாமல் நக்கிவிட்டாலும்
பிட்டத்தில் நாக்கை ஓட்டி
தேயத்தேயத் தீட்டிவிட்டு
மீண்டும் புல் தேடி அலையும் பசு
உலர்ந்து மடிந்த பூக்களையோ
உண்டுவுண்டு மயங்கும்

அசை போடுகையில் மட்டும்
கழுத்துமணி கேட்கும் பசுவுக்கு
இறக்கம் பொங்கி
நுரை தள்ளும்.

என்ன செய்ய முடியும்
அதன் மூக்குக்கயிறு
முன்னால் மட்டுமே இழுபடக்கூடியதல்லவா?

பாவம் என்னதான் செய்யும் பசு
கன்றுக்கு சுரக்கத்தானே
காலங்காலமாய் மேய்கிறது

நீர்த்த பால் மட்டுமே செரிக்கும்
வெள்ளைத் தலைக்
கலப்பினக் கன்று அது

மண்ணின் வாசம் வரும் எதுவும்
மட்கியதே என்று குமட்டும்
நோஞ்சான் கன்றுக்கு
நுனிப்புல்லில் ஊறிய
பாலூட்டி வளர்க்கும் பசு

இரத்த வாடை அடித்துவிட்டால்
தன்னையே வெறுக்கும் என்றஞ்சி
கன்றுகளுக்கு இப்போதெல்லாம்
சீம்பாலும் கூட கொடுப்பதில்லை.


நன்றி : பதாகை  02 மார்ச்  2015.