எதனது கண்கள் வழியேயும்
தன்னையே பார்த்துக்கொள்வதாய்
நினைத்துக்கொள்ளும் பிரபஞ்சத்தின்
சிறு கூட்டில்
நனைந்த சிறகுகளோடு
அமர்ந்திருக்கும் ஒரு பறவை
ஈரம் கூடும்தோறும்
எடைகூடும் பறவைக்கு - இனி
எழுந்து பறக்க வழியேயில்லை
வெளிபரவும் மெல்லிய ஈரத்தின்மீதும்
இரக்கமற்று வீசி
தடமின்றி உலரச்செய்யும்
வாழ்வின் காற்றால்
ஏக்கமும் உடைய
உள்ளிருந்து பெருகுகிறது
ஒளிகசியும் ஒரு பெருநீர்ச்சுனை
எனினும்
இடைபடும் தன்னிரக்கப் பெரும்பாலை
எந்த சுனையிலும் பசியடங்கா
தீத்துளை – நனைந்த சிறகோ
வெறும் தளை
புலன்களாய் சிதைந்துகிடக்கும் தடங்களில்
உருகிவழிந்து, பறவையை
உலரச்செய்தபடியே இருக்கிறது
ஆதிவினையில் சூல்கொண்ட பசி
பறவைக்கும் பறத்தலுக்கும் இடையிலும்கூட
ஊறி இறங்குகிறது
ஊழியெனப் பெருகும் நீர்
துவளும் சிறகுகள்
துடுப்பாவதொன்றே
ஈரத்தோடும் எடைதுறந்து மீண்டும்
கட்டற்று அலையும் வழியென
கண்டுகொள்கையில்
காலம் ஏதும் மிச்சமில்லை
அந்த தனிப்பறவைக்கு.
நன்றி : சொல்வனம்