வீடுகள்நெடுநாட்களுக்கு முன்பு
எங்கள் எல்லோருக்காகவும்
கட்டப்பட்டது
ஒரு வீடு

அதிலிருந்து
எங்கள் ஒவ்வொருவருக்குமான
தனித்தனி வீடுகளை
பிரித்தெடுத்து
நாங்களே கட்டிக்கொண்டோம்

ஒரு கார் நிறுத்துமிடமும்
ஒரு புத்தக அலமாரியும்
ஒரு மர நாற்காலியும்
வெண்ணிற கம்பிகள் கொண்ட
ஒரு ஜன்னலும்
அதன் வழி தெரியும்
ஒரு மரமல்லி மரமும்
மூன்று செம்பருத்திச் செடிகளும்
மட்டுமே கொண்டது
என் வீடு

கார் நிற்குமிடதிற்கருகில்
சிறு கோலமிடும் வாசலும்
இருபத்து நான்கு புட்டிகள் அடுக்கிய
மூன்றடுக்கு அலமாரி கொண்ட
சமையலறையும்
நான்கு தொலைக்காட்சித் தொடர்களில் வரும்
தொண்ணூறு பேர் வசிக்கும் வீடு
என் மனைவியுடையது

காருக்கு அருகில்
ஒரு சைக்கிள் நிறுத்துமிடமும்
மாடிப்படிக்கு கீழே
கிரிக்கெட் மட்டை
வைக்கும் இடமும்
பேட்மேனும் சச்சினும்
அவனுடன் வசிக்கும் உள்ளறையும்
கொண்டது
என் மகனின் வீடு

பெரிய கார் நின்று சென்ற இடத்தில்
தன் மூன்று கார்களை ஓட்டும் இடமும்
பளபளப்பான  வெண்ணிற தரையும்
ஒரு விமானம்
ஒரு புலி
இரண்டு மான்கள் மற்றும்
ஒரு ரப்பர் பந்து
எல்லாவற்றையும் வைக்கும் அலமாரியின்
அடிப்பகுதியும் கொண்டது
என் மகளின் வீடு

மூன்று வாழை மரங்களும்
ஒரு தென்னையும்
தினம் காய்ந்துகொண்டே இருக்கும் தோட்டமும்
எப்போதும் பிள்ளைகளின்
கூச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும்
உள்வீடும் கொண்டது
என் தந்தையின் வீடு

பண்டிகை வரும்தோறும்
ஒருவர் மற்றவர் வீட்டை
முற்றாகக் கலைத்து
ஒரே வீடாக்குவோம்

மறுநாள் தொடங்கி
அடுத்த வருடம் வரை
எல்லோருக்குமான வீட்டிலிருந்து
எங்களுக்கான தனித்தனி வீடுகளை
பிரித்து எடுத்து
கட்டிக்கொண்டே இருப்போம்.

நன்றி : சொல்வனம் 
  

1 comment:

radhakrishnan said...

அருமையான கவிதை,கவிதையில் அவ்வளவாக விருப்பம் இல்லாத எனக்கே
பிடிக்கின்ற கவிதைமிகவும் ஆசையாக இருந்தாலும் நீங்கள் கூறுவது நடக்குமா? கற்பனையில்தான் எண்ணிமகிழ்ந்துகொள்ள வேண்டும்.
ராதாகிருஷ்ணன்