பெண்ணின் பெண்துகளும்
ஆணின் பெண்துகளும்
இணைந்து
பிறந்து பெண்ணாகிறது
பெண்ணின் பெண்துகளும்
ஆணின் பெண்மையை மறைக்கும்
நுண்துகளும் மட்டுமே இணைந்து
பிறந்தது ஆணாக்கப்படுகிறது
படைப்பு தன் இச்சை
முகம்பார்க்கும்
புடைத்த கண்ணாடியை
ஆணெனக்கண்டு அள்ளிக்குடிக்கிறது
ஒடுங்கிய பெண்மையை
உள்ளீடாகக் கொண்டதோ
சின்னஞ்சிறு மேடுகளைக் கண்டு விடைத்தும்
பள்ளங்களில் விழுந்து குழைந்தும் போகிறது
படைப்பதில் அன்பின் இடம்
மெல்ல பாலையாகிறது
படைக்க முடியாததில் அது
பாறையின் கருவறை நீராகிறது
வடிந்து விலகும் நீரின் திசையில்
பாலை உள்சுருங்குகையில்;
மனமே மார்பென ஊறிடும் பாறை
உடைந்திட ஏங்கி குளிர்ந்து தளர்கிறது
தேனுள்ள மலர்களை மட்டும்
தேடி அமரும் வண்டுபோல
ஈரமுள்ள பாறையின் மீது
தன் இயல்பை வரைகிறது பிரபஞ்சம்
எப்போதும் பசித்திருக்கும்
அந்த பிள்ளையின் பொய்யழுகையில்
பாறையைச் சூழ்ந்த ஆணெனும்
முரண்துகள் உடைகிறது
அகமார்பில் ஊறும் பெருங்காதல்
ஆழித்துளை மீறிப்பொங்கிடும்
ஆண்வழி
அதன் ஊற்றுக்கண்ணிலும் இருக்கிறது
ஒரு ஆதிப் பெண்துகள்
பாறையை சிதைத்து
பாலையில் தூவி மறைகிறது
கடைசிக்காற்று
மணலில் விளையாடும் பெரும்பிள்ளை
மீணடும் ஒரு பெண் துகளையும் - அதை
முடக்கியதாய் நடிக்கும் துகளையும்
செய்யக்கூடும்.