உளக்காட்சிகளை வெளிப்படுத்தும் சொற்தேர்வுகளில் தனித்துவ பாணியை கொண்ட கவிதைகளை எழுதிவரும் சோழகக்கொண்டல் இவ்வாரம், தன்னிடமிருந்து தனிமையை யார் மீட்டுத்தந்தாலும் எஞ்சுவது தனிமைதான் என்பதை தவிப்போடு சொல்கிறார்.
- பதாகை
என் தனிமையை மீட்டுத்தரும்படி
நான் கேட்பதற்கு யாருமில்லை
யார் மீட்டுக்கொடுத்தாலும்
எஞ்சுவதை தனிமையென்று
நம்புவதற்கில்லை
உயிரின் ஆழத்தைத் தொட்டு
ஒரு துளி கண்ணீரோடு வெளிவரும்
கவிதையை வாசிக்கையில்
உலரும் கிளை விட்டு
உதிரும் இலையென
மனம் நழுவும் கணத்தில்
‘ஆகா! கவிதை வாசிக்கிறாயா?’
என்று கேட்பது யார்?
நின்ற இடம் மறந்து
நெஞ்சு நெகிழ்ந்து
உருக்கும் ஒரு இசை நதிக்குள்
உள்ளிறங்கிப் பாயும் நொடியில்
‘என்னே ஒரு ரசனை ?’ என்றபடி
என் பிடரியைப் பிடித்து இழுப்பது யார்?
கனிச்சுமை தாளாது
வளையும் கொடி கண்டு
கால் நடுங்கும் விசையோடு
காமம் திரண்டு
கண்களுக்கு வரும் பொழுதில்
‘இத்தனை மட்டமானவனா நீ ?’
என்று என் கழுத்தைப்பிடித்து திருப்புவது யார்?
கரைதலுக்கு எதிரான
இந்த கவனத்தைக் களைந்துவிட்டு
என்னிடமிருந்தே
என் தனிமையை மீட்டுத்தரும்படி
நான் கேட்பதற்கு யாருமில்லை.
நன்றி : பதாகை
No comments:
Post a Comment