கடைசிக் கனவு

இலக்கின்றி
எல்லையுமின்றி
மிதந்து மிதந்தேறி
மெல்லப் பறக்கிறேன்
சூரியன் சென்று மறைந்த பாதையில்

காத்திருக்கும்
பொறுமையற்ற மனம்
காற்றில் சருகாய் அலைகிறது
விடியல் கூடாத திசைகளில்

நான் ஏங்கியலைந்த
பூக்களெல்லாம்
பழுத்துக் கிடக்கின்றன
தூங்காது கிடந்து
துரத்திய இலக்குகள்
காலாவதியாகிவிட்டன

ஏற்றிவந்த இறகுகளையும்
எண்ணி எண்ணி
உதிர்க்கிறேன்

கற்று வந்த எதையும்
கசந்து காற்றில்
கரைக்கிறேன்

தூரத்து திசைகள் எங்கிலும்
துளி நீலமும்
எஞ்சவில்லை

இருண்டு சூழ்கிறது
எல்லா திசைகளிலும் வானம் -
ஒளி மிஞ்சாத வானில்
நிறம்தான் ஏது?
கண்களும்தான் எதற்கு?

வலித்து சிதையும்
சிறகுகளுக்கு
வாழ்வின் தூரம்
முடிவிலியென சலிக்கிறது

என் மோட்சத்திற்கான மரத்தடி
இந்த வாழ்வின் பாலையில்
எங்குதான் இருக்கிறது?

எத்தனை இனியது மரணம்
கைகளில் கொண்டுவந்தும்
கடைசிவரை திறக்க முடியாத
பரிசுப்பெட்டி

எத்தனை அரியது மரணம்
யாருக்கும் கிடைப்பதில்லை
இரண்டாம் வாய்ப்பு

மீண்டும் மீண்டும்
இறக்கும் இன்பதிற்காகவா
மீண்டும் மீண்டும்
பிறக்க வருகிறோம்?

இலக்குகள் ஏதும் தெரியவில்லை
எஞ்சிய இறகுகளும் உதிர்ந்து
இருளுக்குள் விழுகின்றன
என்ன செய்ய?

இனி நான்
விழித்துக்கொண்டு வீழ்வதா ?
ஆழ்துயில் கொண்டு மீள்வதா?

 
நன்றி : திண்ணை

No comments: