தனிமையின் தேநீர்விருந்து

















" தனிமையின் பாடகன் சோழகக்கொண்டல் கவிதைகளில் இவ்வாரம், தனிமையின் தேநீர் விருந்து. கவிஞர் அருந்துவது தேநீரா கண்ணீரா என்று தெரியவில்லை- சீனாவில் கசப்பை உண்டு இனிப்பைச் சுவை என்றொரு பழமொழி இருப்பதாகக் கேள்வி. சோழக்கொண்டல் கவிதைகள் கசப்பில் இனிப்பு கரைந்த கலவை. இவ்வார தேநீர் அதன் இன்னொரு சான்று."


- பதாகை 22 ஜூன் 2015

பின்னிரவிலும் அணைக்கப்படாமல்
விளக்கெரியும் ஜன்னல்களுக்குப் பின்னே
விழித்திருக்கிறது தனிமை


எட்டிவிடமுடியா ஆழம்கொண்ட
அதன் தேநீர்கோப்பையை
பகிர்ந்து பகிர்ந்து பருகியபடியே
தனிமையை தக்கவைக்கின்றன
முகிழா காதலும்
முயலா காமமும்
முந்தையநாள் சோறும்
மூப்பும் பிணியும்


சாக்காடு படிந்திருப்பதோ
சர்க்கரையோடு அடியில்
இனிப்புக்கு ஏங்கி
எத்தனை பருகினாலும்
இறங்குவதாய் இல்லை
தேநீர்மட்டம்


இளமை மிச்சமிருக்கும் ஜன்னல்களுக்குப் பின்னே
மதுப்புட்டிகள்
இன்னும் சில ஜன்னல்களுக்குப் பின்னே
மருந்துப் புட்டிகள்


திறந்துதான் இருக்கும்
ஜன்னல்களைவிட்டு
வெளியே நிற்கிறது காற்று
உள்ளேயே உறைந்துவிட்டது காலம்
இவை ஒன்றையொன்று
தொடவும் கரையவும் இயலாதபடிக்கு
திரையொன்றை இட்டுவிட்டு
பொய்ப்பாலம் கட்டுகிறது
இமைக்காமல் எரியும் விளக்கு


அந்த அணையாவிளக்குகள்   
எரிக்கும் அறைகளுக்குள்ளே
உறக்கம் நுழைய முடியாதபோது
எஞ்சியிருக்கப்போவது
வெக்கையும் ஈரமும் சேர்க்கும்
பெருமூச்சும் கண்ணீரும் மட்டுமே.

-----

நன்றி : பதாகை

காத்திருக்கும் தனியறை





















பூட்டிய கதவுக்குப் பின்னால்
காத்திருக்கிறது
பிசுபிசுக்கும்
தனிமை திரவம்

கதவின் தொப்புல் முடிச்சில்
வெறித்தபடி தொங்கும்
பூட்டின் கண்வழி
சொட்டுச்சொட்டாய்
ஊறி வடிகிறது
உள்ளிருக்கும் திரவம்

சாவித்துவாரத்தில்
கைகள் தழுவி
நடுங்கும் பொழுதில்
கதவைத் துளைத்துகொண்டு
கட்டிலில்போய் விழுகிறது
எனக்கு முன்பே மனது

நீந்திக்கடந்திட முடியா
நெடுந்தொலைவில் நிற்கின்றன
இந்த அறையின் சுவர்கள்

நினைவில் இருக்கும் வீடோ
நனைந்த அப்பளமாய்
எங்கோ கரை ஒதுங்கியிருக்க வேண்டும்

அலையும் நுரையும்
கலைத்துவிடாத
ஆழத்தில் நிற்கும்
இமைகள் இல்லாத
என் அறையின் சுவர்கள்
உறங்குவதுமில்லை
உறங்க அனுமதிப்பதுமில்லை

திறந்த ஜன்னல்கள் எதிலும்
துளியும் வெளிச்சிந்தாத
இந்த பழந்திரவத்தில்
மதுவின் நெடி வீசுகிறது

இருள்கவிழும் நேரமெல்லாம்
ஏறியபடியே இருக்கும்
இந்த திரவமட்டத்தை
பருகிப் பருகியே
பத்திரப்படுத்துகிறது மனது

ஈரம் கனக்கும்
இந்த மதுவின் சிறையை
அறைந்து சாத்திவிட்டு
வெளியேறக்கூடும் என்றாலும்

நிச்சயம் திரும்புவேன்
காத்திருக்கும்
என் தனியறைக்கு.

-----

நன்றி : சொல்வனம் 


நத்தை வீடு

















எந்த இரவிலும் தவறவிடாமல்
எப்படியும் திரும்பிவிட வேண்டும்
என்று நினைக்கும் வீடு
எல்லோருக்கும் ஒன்று உண்டு  

இரவில்தான் இருப்பை முகிழ்க்கும் என்றாலும்
இடமோ காலமோ லட்சியமில்லை
இந்த வீட்டிற்கு

யாருடைய பயணத்திலும்  
முதலில் மடித்து வைக்கப்படும் முகவரியும்
திட்டமிடாத நிச்சயத்துடன்
உடனழைத்துச்செல்லப்படும்
சகபயணியும் இதே வீடுதான்

களைப்பின் மீதும்
கனவுகளின் முன்னேயும்
கூடிக்கலைந்தும்
குளிருக்குள் சுருண்டும்
கணக்கற்ற வழிகளில் தன்னையே
கட்டியமைத்துக்கொள்ளும்
இப்படியான ஒரு வீடுதான்
எல்லோருக்குமான கனவு

தானே மூடிக்கொள்ளும்
இமைகளுக்குப்பின்னே தாழ்திறக்கும்
களைப்பின் பசியை
கனவுகளின் ருசியால் நிறைக்கும்
நித்திரை எனும் நத்தை வீடு அது

பசியும் பிசாசுகளும்
வாடகைபாக்கியும் பள்ளிக்கட்டணங்களும்
பணிமுடிப்பு அவகாசங்களும்
பிரிவும் காமமும்
சதா எரித்துக்கொண்டே இருக்கும்
இதை நெருங்குவதென்றால்
யாரேனும் வந்து இந்த வீட்டின்மீது
அன்பின் நிழலை விரித்து
இருப்பின் குளிரை நிறைத்து
அணைப்பின் தகிப்பை மூட்டவேண்டும்

பிறப்புக்கும் முன்பிருந்தே
பிரியாமல் சுமந்தலையும்
இந்த வீட்டாலும் கைவிடப்படுபவர்களின்
அறையின் விளக்குகள் அணைக்கப்படுவதில்லை

காலத்தின் கைவிரல்வந்து
உடலைத்தொடும் ஒருநாளில்
விருட்டென்று சுருட்டிக்கொண்டு
அந்த வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வோம்
என்றைக்குமாக.   

---

நன்றி : பதாகை