நத்தை வீடு

எந்த இரவிலும் தவறவிடாமல்
எப்படியும் திரும்பிவிட வேண்டும்
என்று நினைக்கும் வீடு
எல்லோருக்கும் ஒன்று உண்டு  

இரவில்தான் இருப்பை முகிழ்க்கும் என்றாலும்
இடமோ காலமோ லட்சியமில்லை
இந்த வீட்டிற்கு

யாருடைய பயணத்திலும்  
முதலில் மடித்து வைக்கப்படும் முகவரியும்
திட்டமிடாத நிச்சயத்துடன்
உடனழைத்துச்செல்லப்படும்
சகபயணியும் இதே வீடுதான்

களைப்பின் மீதும்
கனவுகளின் முன்னேயும்
கூடிக்கலைந்தும்
குளிருக்குள் சுருண்டும்
கணக்கற்ற வழிகளில் தன்னையே
கட்டியமைத்துக்கொள்ளும்
இப்படியான ஒரு வீடுதான்
எல்லோருக்குமான கனவு

தானே மூடிக்கொள்ளும்
இமைகளுக்குப்பின்னே தாழ்திறக்கும்
களைப்பின் பசியை
கனவுகளின் ருசியால் நிறைக்கும்
நித்திரை எனும் நத்தை வீடு அது

பசியும் பிசாசுகளும்
வாடகைபாக்கியும் பள்ளிக்கட்டணங்களும்
பணிமுடிப்பு அவகாசங்களும்
பிரிவும் காமமும்
சதா எரித்துக்கொண்டே இருக்கும்
இதை நெருங்குவதென்றால்
யாரேனும் வந்து இந்த வீட்டின்மீது
அன்பின் நிழலை விரித்து
இருப்பின் குளிரை நிறைத்து
அணைப்பின் தகிப்பை மூட்டவேண்டும்

பிறப்புக்கும் முன்பிருந்தே
பிரியாமல் சுமந்தலையும்
இந்த வீட்டாலும் கைவிடப்படுபவர்களின்
அறையின் விளக்குகள் அணைக்கப்படுவதில்லை

காலத்தின் கைவிரல்வந்து
உடலைத்தொடும் ஒருநாளில்
விருட்டென்று சுருட்டிக்கொண்டு
அந்த வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வோம்
என்றைக்குமாக.   

---

நன்றி : பதாகை

1 comment:

சென்னை பித்தன் said...

//காலத்தின் கைவிரல்வந்து
உடலைத்தொடும் ஒருநாளில்
விருட்டென்று சுருட்டிக்கொண்டு
அந்த வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வோம்
என்றைக்குமாக. //
அருமை