முகநூல் முனி

 
முகநூலைக் கடித்து
மூன்று வேலையும் தின்னும்
தற்குறி முனியொன்று தான்வந்து பதிவிடும்
கேளுங்கள் பதர்களே என்று

ஆயிரம் வரிகளில் நீளும் ஆய்வுப்பதிவுகள்
அறிஞனை அசடனென்றும்
போகியை புத்தனென்றும் பொய்யர நிறுவி

படிக்காத நூல்களுக்கும் பதவுரை எழுதும்
பதர்களுக்குத்  தெரியுமா என்ன
பதிவுக்கு நகல் தந்த மூலப்பதிவு

ஆன்மீக ஆய்வுகளோ ஐந்து தளம் மீண்டெழும்
'பத்துப் பதிவுகளில் பரமனை அடைவதெப்படி'
'பாபாவின் மாமாவும் பச்சைத்தமிழனே'

உன் அப்பன் தமிழனென்றால்
ஒப்புகொள்,  உடனே  விரும்பு
பகிர்ந்து விடு இதை என்றும் மிரட்ட

ஆயிரம் வேண்டா 'விருப்பு'களுக்கும்
ஐம்பது நூறு 'போற்றி'களுக்கும் பிறகு வந்தது
எதிர்க்குரல் முனியொன்று

பாபாவின் மாமா தமிழனோ  தானறியேன்
ஆனால் மாமி ஒரு மலையாளி
ஒரு காதல் கதைக்கே கால்முளைத்தது

மீண்டும் ஆயிரம் 'விருப்புகள்', 'போற்றிகள்'
மூண்ட மொழிப்போரில் மாண்ட சரித்திரத்தை
தோண்டிப் புதைத்தது  பின் வந்தப்  பெரும்படை

தோழி வேட்டையில் உலகம்சுற்றி தோல்வியுற்று
கடைசியில் தனது பொய்க்கணக்கை
தானே காதலித்த கூட்டத்தில் சேர்ந்து

உலக அழகிகளின் முகத்தைப் பெயர்த்தெடுத்து
ஒட்டிக்கொண்டதேவதைகளை
போற்றிப்பாடப்  போய்விட்டது அந்த முனி.










No comments: