"குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஓசை நயமும் கற்பனை வளமும் கொண்ட கவிதையை எழுதியிருக்கிறார் சோழகக்கொண்டல்"
- பதாகை
--- கோப்பைகளின் கதை ---
என்னிடம் மூன்று
காலி மதுக்கோப்பைகள் இருக்கின்றன
எப்போதுமே மதுவின் ஈரம் பட்டிராத
கருங்கல்லால் செய்த
காந்தியின் கோப்பை ஒன்று
நிரம்பி நிரம்பியே
நிறம் மங்கிப்போன
தங்கத்தால் ஆன என்
தந்தையின் கோப்பை ஒன்று
எப்பொழுதோ விழுந்து உலர்ந்த
மதுவின் கறையோடு இருக்கும்
மண்ணால் செய்த என்
சொந்தக் கோப்பை ஒன்று
என் லட்சியவாதத்தின் முதுகெலும்பில்
காந்தியின் கோப்பை இருப்பதை
யாரும் நம்புவதில்லை
தீராத வேட்கை சுழலும் இரத்தத்தில்
ஒரு தங்கக்கோப்பை
காலியாக இருக்கும் என்பதை
என் தந்தையும் நம்புவதில்லை
மது கரைபுரண்டோடும்
மணல்வெளியில் எனது
மண்கோப்பை பத்திரமாய் இருக்கிறதென்பதை
என்னாலும் நம்பமுடிவதில்லை.
--- இலட்சியவாதப் பூனை ---
கோடைத் தொடங்குகிறது
குளிர்மதுப் புட்டிகள் குவிகின்றன
‘வாப்பு’ வை வரவேற்று
கோப்பைகள் நிறைகின்றன
நனையாத கோப்பைகள் கொண்டதால்
இந்தியனுக்கும் அன்னியனாய் நான்
வீதிகள்தோறும் உலரும் கோப்பைகள்
விடுதிகள் தேடி உருள்கின்றன வாரக்கடைசியில்
மூன்று கோப்பைகளை
முதுகின்மேல் தாங்கியபடி
கண்களைக் கட்டிக்கொண்டு
கம்பிமேல் நடக்கும் பூனைபோல் இருக்கிறேன்
என்று நண்பன் வந்து சொல்லிவிட்டுப் போனான்
நீ பழிக்கும் இந்த கடலின் மீது
மிதப்பதற்காகவே செய்யப்பட்டது
நீச்சலுக்கு பயந்து நீ நிற்கும்
அந்த இலட்சியவாதப் படகு
கடலின் சுழியும்
கவிழ்க்கும் காற்றும்
உறையும் குளிரும் உணராமல்
ஒருபோதும் அடைய முடியாது
கரைசேரும் உத்தியை உறுதியை.
என்றான்.
நான் குதிக்க விரும்பாத
கடலின் குளிர் சுழன்றடிக்கிறது
என் கோப்பைகள் இருக்கும் அலமாரியில்.
கதவுகளை அறைந்து சாத்திவிட்டு நடக்கிறேன்
அவனோடு இரவு விடுதிக்கு.
--- இரவு விடுதி ---
இரவின் திரையில்
எழுந்து நெளிகின்றன
நினைவழிக்கும் பாம்புகள்
தலைதொங்கி தவழும் மழலையென
நிறைந்து சரிகின்றன கோப்பைகள்
விஷமேறிய நாக்குகளில்
குழைந்து உடைகின்றன மொழிகள்
வீதியில் எங்கும் செயலற்று கிடக்கும் குளிர்
எனக்கு மட்டுமே எஞ்சி ஏறுகிறது
விடுதிகள்தோறும் காவல்புரியும் துவாரபாலகர்களிடம்
யாசித்து வரிசையில் நிற்கின்றன
இன்னும் இடமிருக்கும் கோப்பைகள்
நியாயத்தீர்ப்பு கிட்டிவிட்டது
நீந்திப்பாய்கிறோம் இருளுக்குள்
இடி இடியெனும் இசையில்
நெடிதுளைக்கும் புகையில்
குடிகுடியென கூவியழைக்கிறது
ஒரு விஷத்தீ வெடித்தெரியும் யாகம்
நான் அஞ்சியஞ்சி கால்நனைக்கும் கடலில்
தாவிவிழுந்து நீந்துகிறான் நண்பன்
நடன அரங்கில் நடப்பதைப்போல் அவமானமிது என்று
பிடித்துத் தள்ளுகிறான் பின்னாலிருந்து அவனே
உடைகள் தளர்கின்றன
உன்மத்தம் கொள்கின்றன கண்கள்
உலர்ந்து வலிக்கிறது நாக்கு
மோதி மீள்கின்றன மென்மார்புகள்
இழுத்து இடைகோர்க்கும் கைகள்
பிண்ணிப் பின்வாங்கும் கால்கள்
நான் வலிந்து நீந்தினாலும்
வழுக்கி உள்வாங்குகிறது கடல்
என்னைவிட்டு
உலர்ந்த கோப்பை இதில்
ஒருபோதும் நீந்த முடியாது
என்று தெரிந்தபின்
வெளியேறி நடக்கிறேன்
விடுதியைவிட்டு.
நன்றி : பதாகை