சொல்லிச்செல்பவனின்
குரல் இல்லாமல்
தானே நிகழும் கதைகளை
கேட்டபடியே நிற்கிறது
காலத்தை அசைபோடும்
இந்த ஆலமரம்
இரவுக்குள் தலை நுழைக்கிறது வானம்
இருளுக்குள் உயிர் கொள்கின்றன கிளைகள்
கிளிகள் குயில்கள்
காகங்கள் கொக்குகள்
இன்னும் ஆயிரம் சத்தங்கள்
இனிக்கும் ஆயிரம் முத்தங்கள்
ஒலிகள் மொழிகள் ஆக்கப்படாமல்
ஒலிகளாகவே பேசப்பட்டு
ஒலிகளாகவே கேட்கப்படுகின்றன
எண்ணங்கள் எழுத்துகள் ஆகாமல்
எண்ணங்களாகவே எண்ணப்பட்டு
எண்ணங்களாகவே சேமிக்கப்படுகின்றன
உணர்ச்சிகள் வாக்கியங்களில் எழுதப்படாமல்
உணர்ச்சிகளாலேயே உந்தப்பட்டு
உணர்ச்சிமிகும் செயல்கள்வழியே
கடத்தப்படுவதால்
ஓயாமல் நிகழ்ந்தபடியே இருக்கும்
இந்த களத்தின் கதைகளில்
சொல்லிச்செல்பவனின் குரலை
ஒருபோதும் தனித்துக் கேட்டதில்லை
இந்த மரம்.----------------
நன்றி : வல்லமை
No comments:
Post a Comment