பைனரி காவியம்















இருத்தல் இல்லாதிருத்தல்
அல்லது
இல்லாதிருத்தல் மட்டுமே
எஞ்சியிருத்தல் எனும்
இரட்டை நிகழ்தகவுகளை தாங்கிய
ஒற்றை நாணயத்தால்
அளக்கப்படும் புடவி

இயல்பில் உறையும் சுழியும்
இயல்பு திரியும் ஒன்றும்
அடுத்தடுத்து நிகழும்
எந்திர மொழியில்தான்
எழுதப்பட்டிருக்கிறது
படைப்பின் மந்திர கவியும்

புல்லிவட்டம்
அல்லிவடம்
பூவொரு முழுவட்டம்
பூமறைக்கும் இல்லை நீள்வட்டம்
இலைதாங்கி வளையும்கிளை அரைவட்டம்
அறுபட்ட கிளை முகத்தில் ஆண்டுவட்டம்
கிளைகசியும் நீர்த்துளி கோளவட்டம்

நீருக்குள் அணுவும்
அணுவுக்குள் கருவும்
கருவுக்குள் துகளும்
துகள் நகரும் களமும்
எல்லாம் வட்டம்

வட்டச்சுழிகள் கூடி
வலுவுள்ள கழியுமாகி
வானுக்குள் தலைநுழைத்து நின்றபடி
தன்னையே எண்ணிக்கொள்கையில்
மரம் ஒன்று

நிறைந்து முற்றிய கனி - ஒன்று
நீரின்மேல் விழுகையில் - சுழி
சன்னதம் கொண்டு எழும் நீர்க்கரம் - ஒன்று
அது சரிந்து கலைகையில்
எஞ்சுகிறது மீண்டும் - சுழி

வெப்பத்தை அடைகாக்கும்
விரிசதைக்குடுவை - சுழி
விருப்பும் விசையும்கொண்டு
விதைநீர் பாய்ச்சும் குறி - ஒன்று
இன்மையெனும் சுழியிலிருந்து
இருப்பெனும் பிறப்பு
நிகழ்கையில்
எண்ணிகையாவது கூடுகிறது
ஒன்று.

----------

நன்றி : பதாகை

No comments: