கைவிடப்படுதல்வாசல் வந்தமரும் சிட்டுகளுக்காக
நான் வீசியெறியும் நெல்மணிகள்
பயந்து எழுந்து
பறந்து மறையும்
குருவிகள்

யாருக்கும் வேண்டாமல்
வீதியில் கிடக்கின்றன
எனது நெல்மணிகள்

நதியின் நீரைக்
கரைதழுவும் விளிம்பில்
நூறு தவளைகள்
தண்ணீர் பாம்புகள்

என் காலடி பட்டதும்
சட்டென கலைந்து
அலையெழ மறைகிறது
ஒரு காட்சி

தனியரங்கில்
வெறும்திரை பார்த்துநிற்கும்
கண்கள்

நிலம் பிளப்பதை
கடல் கொதிப்பதை
முன்னறிந்து நீங்குகின்றன
பறவையும் விலங்கும்

செவியும் பார்வையுமின்றி
செத்துமடியும்
பூச்சிகளென மனிதம்

எழுநூறுகோடி மரங்கள் கொண்ட
தனிக்காடு மனிதம்
பூமியின் ஒவ்வாமையில்
ஒட்டி வளரும் புழு

உலகத்திற்கும் எனக்குக்குமான
இடைவெளி ஒரு
வளரும் முடிவிலி

வாலை குழைத்தபடியே வந்து
வாசலோடு நிற்கிறது
கைவிடப்படுதலின் நரகத்திலிருந்து
காப்பாற்ற வந்த
கடைசிக் கருணை

தனித்து விடப்படுகிறேன்
வீட்டிற்குள்.


நன்றி : திண்ணை


No comments: