உலகின் மறுமுனையில் வீடு


எனைக் கவ்விச்சூழ்ந்திருக்கும்
காலநாகத்தின்
நடுக்கண்டத்தில் நான்  

தலையையும் வாலையும்
தானேயறியாத விஷநதியின்
அகால இருளுக்குள்
என்னில் எஞ்சியது எதுவுமில்லை

படுக்கை விரிப்பில்
சிறு கலைவும் இல்லை
அடைத்த கதவுகளுக்குப்பின் உறைந்த
சாளரத்திரைகளும்
விலக்கப்படுவதேயில்லை

என்குரல் எப்படி இருக்குமென்று
யாரிடமாவது கேட்கவேண்டும்
மீண்டும் உடைத்துவிட்ட
கண்ணாடியை மீட்பதற்குள்
என் முகமும் எனக்கு
மறந்துவிடக்கூடும்

யாரோ பெண்கள் சிரிக்கிறார்கள்
எம்பிக்குதிக்கின்றன பிள்ளைகள்
மெல்லிய திரைவிலகலில்
ஒரு மௌனப்படம் மட்டுமே இவை
செவியும் சிந்தையும்
விருப்ப ஓய்வில்

உருவமோ வண்ணமோ தெளிவின்றி
எஞ்சியிருக்கும் ஊரின்
ஓவியத்திலிருந்து
ஒவ்வொரு கோடுகளாய்
நகர்ந்து வெளியேறுகின்றன  

உலகின் மறுமுனையில்
இருக்கும் எனது வீடு
வெறும் சொல்லாக
தேய்ந்துவிட்டது

குடியிருப்பு முகப்பின்
அஞ்சல்பெட்டியில் நிறைந்திருக்கும்
வெற்றிடத்தின் எடையோடு
தினந்தினம் அறை திரும்புதல்
அத்தனை எளிதல்ல

மீண்டும் மீண்டும் திறந்தாலும்
வெற்றுச் சிரிப்போடு
முகம்சுளிக்கிறது மின்னஞ்சல்

காலம் எனும் ஆலகாலம்
கழுத்துவரை ஏறிவிட்டது
இன்னும் நான் இங்கிருப்பது
என் வசத்தால் இல்லை.

-----
நன்றி : பதாகை  


ஒளிப்படம் : http://zlain81.deviantart.com/

No comments: