உலகம் எனும் சிறு நிகழ்வில்
நான் எனும் நுண் நிகழ்வு
ஒரு எஞ்சிய குப்பையா
மகரந்தத் துகளா
எப்படியும் காமமே இந்த
நிகழ்வின் மீது வீசும் காற்று.
இருப்பு எனும் திசையிலி படகில்
சிந்தனை என்பது
துடுப்பேதானா அல்லது
தோன்றி மறைந்து
மீண்டும் வேறிடம் தோன்றும்
நீர்ப்புகும் துளையா
எப்படியும் காலமே இதன்
விடையிருக்கும்
முத்திரையிடப்பட்ட குடுவை.
வாழ்வெனும் கட்டற்ற நதியில்
உறவுகள் என்பது
அணையிடும் கரையா
கரைபடும் மணலா
எப்படியும் அன்பு ஒன்றுதான்
நதியின்
ஈரம் நிலைக்கும் பள்ளம்.
1 comment:
i like very much
Post a Comment