கற்பனைக் கோடுகள்



ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும்
எண்ணற்றக் கோடுகளைப் போன்றது 
உன் புன்னகையிலிருந்து
நான் வரையும் கற்பனைகள்.

வெட்கப்பெருக்கம்



இரு கன்னத்து
சம வெட்கங்களின்
வெட்கப்பெருக்கம்
ஒரு பூஜ்யமற்ற பூகம்பம்.

மையவிசை


நம் இணைகரங்களின்
மையவிசை
ஆதியிலிருந்து உயிர்வழியாக
வர்க்கங்களுக்கும் பாயும்
காதல் இதன் மையப்புள்ளி.

தேற்றம் (நிரூபணமின்றி )



உன் செவ்வண்ண முகத்து
குழிப்புள்ளிகள்
புன்னகையின் மையத்திலிருந்து
சம தொலைவில் இருக்கும்.

தீரா ஊடல்



எண்ணிக்கையற்ற தீர்வுகளைக்
கொண்ட ஒரு சோதனை
உன் ஊடல் !

கற்பனை எண்




நீ எனக்கு எழுதிய
கடிதங்களின் எண்ணிக்கை
ஒரு கற்பனை எண் !

வாழ்வின் பரப்பளவு



உன் மைவிழியை
மையமாகக் கொண்ட
பார்வை வட்டத்தின்
விட்டதோடு முடிகிறது
என் வாழ்வின் பரப்பளவு.

வாழ்வு எண்



உன் காதல் சமன்பாடுகளால்
மீதமின்றி வகுபடும்
ஒரு முழு எண் - எனது வாழ்வு !


பதிலீடு


நம் உறவில்
காதலுக்குப் பதிலாக
நட்பைப் பதிலிடச் சொல்கிறாய்
வாழ்வின் மதிப்பு
பூஜ்யம் ஆகும் என்பது தெரிந்தும்.

இதயத்தின் ஆரம்


நம் நாற்கரங்களும்
இணைகரங்களாகி நின்ற மாலையில்
இதயப்புள்ளிகளை
வெட்டிசென்ற மின்கோட்டை
வெட்கத்தாலும் மௌனத்தாலும்
இருசமக்கூறிட்டாய்

இதய வட்டத்தின் ஆரம் குறைந்து
இணையும் புள்ளியின் ஆழம் வளர்ந்தது.


புள்ளியியல்


என் புள்ளியியல்
உன் கோலங்களில் தொடங்குகிறது
என் பூகோளமோ
உன்னை சுற்றி சுற்றியே வருகிறது 

 

முடிவிலிச் சமன்பாடு
















என் ஏக்கமும்  அன்பும் 
காதலின் இருமடியும் 
எல்லாம் சேர்ந்தது 
ஒரு பூஜ்யம்  என்று நிறுவவே
நீ வாதச்சமன்பாடுகளை
பிடிவாதமாய் பதிலிடுகிறாய்
அதன் மதிப்பு
ஒரு முடிவிலி
என்பதை அறிந்தும் கூட.

தொடுகோடு


உன் மேனியிலிருந்து
என் முகத்திற்கு
காற்றால் வரையப்படும்
ஒரு தொடுகோடு
உன் துப்பட்டா.