கற்பனைக் கோடுகள்



ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும்
எண்ணற்றக் கோடுகளைப் போன்றது 
உன் புன்னகையிலிருந்து
நான் வரையும் கற்பனைகள்.

வெட்கப்பெருக்கம்



இரு கன்னத்து
சம வெட்கங்களின்
வெட்கப்பெருக்கம்
ஒரு பூஜ்யமற்ற பூகம்பம்.

மையவிசை


நம் இணைகரங்களின்
மையவிசை
ஆதியிலிருந்து உயிர்வழியாக
வர்க்கங்களுக்கும் பாயும்
காதல் இதன் மையப்புள்ளி.

தேற்றம் (நிரூபணமின்றி )



உன் செவ்வண்ண முகத்து
குழிப்புள்ளிகள்
புன்னகையின் மையத்திலிருந்து
சம தொலைவில் இருக்கும்.

தீரா ஊடல்



எண்ணிக்கையற்ற தீர்வுகளைக்
கொண்ட ஒரு சோதனை
உன் ஊடல் !

கற்பனை எண்




நீ எனக்கு எழுதிய
கடிதங்களின் எண்ணிக்கை
ஒரு கற்பனை எண் !

வாழ்வின் பரப்பளவு



உன் மைவிழியை
மையமாகக் கொண்ட
பார்வை வட்டத்தின்
விட்டதோடு முடிகிறது
என் வாழ்வின் பரப்பளவு.

வாழ்வு எண்



உன் காதல் சமன்பாடுகளால்
மீதமின்றி வகுபடும்
ஒரு முழு எண் - எனது வாழ்வு !


பதிலீடு


நம் உறவில்
காதலுக்குப் பதிலாக
நட்பைப் பதிலிடச் சொல்கிறாய்
வாழ்வின் மதிப்பு
பூஜ்யம் ஆகும் என்பது தெரிந்தும்.

இதயத்தின் ஆரம்


நம் நாற்கரங்களும்
இணைகரங்களாகி நின்ற மாலையில்
இதயப்புள்ளிகளை
வெட்டிசென்ற மின்கோட்டை
வெட்கத்தாலும் மௌனத்தாலும்
இருசமக்கூறிட்டாய்

இதய வட்டத்தின் ஆரம் குறைந்து
இணையும் புள்ளியின் ஆழம் வளர்ந்தது.


புள்ளியியல்


என் புள்ளியியல்
உன் கோலங்களில் தொடங்குகிறது
என் பூகோளமோ
உன்னை சுற்றி சுற்றியே வருகிறது 

 

முடிவிலிச் சமன்பாடு
















என் ஏக்கமும்  அன்பும் 
காதலின் இருமடியும் 
எல்லாம் சேர்ந்தது 
ஒரு பூஜ்யம்  என்று நிறுவவே
நீ வாதச்சமன்பாடுகளை
பிடிவாதமாய் பதிலிடுகிறாய்
அதன் மதிப்பு
ஒரு முடிவிலி
என்பதை அறிந்தும் கூட.

தொடுகோடு


உன் மேனியிலிருந்து
என் முகத்திற்கு
காற்றால் வரையப்படும்
ஒரு தொடுகோடு
உன் துப்பட்டா.

கலைந்த மழை














மழைக்காலத்தின் ஈரம்
மனதின் வேருக்குள் விழுகையில்
கடந்தகாலம் துளிர்த்து
கண்களில் மலரும்

பாதம் சில்லிடுகையில்
பால்யம் திரும்பி இதயத்தில் சொட்டும்

கனவில் எதிர்காலம் கருவுறும்

மழைபூச்சியாகி மனம்
வானத்தில் நீந்தும்

வானம் வெளுக்கையில் கனவு மீண்டு
வானவில்லாய் கலையும்

நீரற்ற மீனாய் நெஞ்சமோ
நிகழ்காலத்தில் கிடக்கும்.


பசித்த பகல்

பசி என்பது வெறும்
உண்பதற்கு முன்பிருக்கும்
உணர்வல்ல
 
அழுந்தக் குத்தும் முள் -
பசியை விழுங்கும் போது
தொண்டையில் கசியும் வலி
நெஞ்சில் ஆறாத் தழும்பாகும்
 
யாரும் அறியாமல்
தனிமைபடுத்தும் -
இயலாமையில் கை நடுங்கும்
 
பசி தரும் வலியில் மட்டுமே
மனிதன் அழும் சக்தி இழக்கிறான்
 
பசி உடலை விடவும்
உள்ளத்தை ஆழத் தைக்கும் நோய்
 
தொடர் பசியில்
தொண்டையில் இறங்கும் நீர்
இரத்தக்குழாயை கீறிடும் ஒலி
காதுகளுக்குக் கேட்காமல்
அடைத்துவிடும்
 
கண்களில் தெரியும்
பசித்தவர்களுக்கு மட்டும்.

முடிவுறாக் கணம்


நீ என் கனவுக்குள்
நுழையும் கணம்
ஒரு முடிவுறாக் கணம்

மீப்பெரு காதல்


மீப்பெரு காதலின் ஈவு
கண்ணீராகும் பிரிவில்
மீச்சிறு இன்பம்
முத்தம்

பெருவெளி மழை













அகன்ற பெருவெளியில்
மழை கண்டு நனைதல்
மயக்கும் ஒரு தவம்

மழையில் கரையாதது
எதுவுமே இல்லையோ
எனத்தோன்றுகிறது

மலையே நுரைத்து மேகமாவதும்
கடலே எழுந்து காற்றாவதும்
காற்றே கரைந்து நீராவதும்

எல்லாம் கரைந்து
மனமும் கரைந்து
நீர்மயமாகி துன்பமும் நீர்த்துவிடுகிறது.

முடிவிலா பெருவெளியில்
மழை நடுவில் நிற்கையில் 
நீரின் பெருமூச்சு
ஒவ்வொரு மண் துகள் மீதும்
அறைந்து வலிக்க அழுவது
புணர் வலி ஓலம் போலவே கேட்கிறது.

பற்றி எறிவது போல
நீளும் நீர்க்கரங்கள் முன்
உயிர்களைனைத்தும் ஒடுங்கி உள்ளடங்கி
மீண்டும் உயிர்ப்புறும்
அமைதி சில்லிடுகிறது.

தனித்த மரங்களின் தலைகள்
மந்திரத்தில் ஆடுகின்றன
உருளும் கற்கள் 
குளிர்ந்து குன்றுகின்றன .

மழை மண்ணைப் புணரும் நெடி
திசையெங்கும் பரவுகிறது.

சில்லறை இதயம்


பிச்சை பாத்திரமும்
பிஞ்சு முகமும் எதிர்வரும் -
கைகளோ
சில்லறை இதயம் தொட்டுப்பார்த்து
இல்லையென்றுதான்
சொல்லும்.



இடர் மழை


நகர வெளியில்
இடமின்றி
சுருங்கிவிடுகிறது
காதலைப்போல மழையும். 



படக்கதை (COMICS)


படக்கதை உலகம் நம் பால்யத்தின் கனவு அது அடர்ந்த காடுகளின் வழியும் குளிர்ந்த ஓடைகளின் வழியும் நம்மை இட்டு சென்ற உலகங்களின் நினைவு இன்றும் பெயரிடப்படாத கிரகங்களுக்கு சாகச வேட்கையோடு ஈர்க்கிறது. அந்த கனவு உலகத்தில் நாம் என்றுமே தொல்வியுடனோ நிரசையிடனோ திரும்பியதில்லை.




http://www.ranicomics.com/

http://tamilcomicsulagam.blogspot.com/